திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று 8 தேர்தல்கள்.. அனைத்திலும் வெற்றி தான்.. உதயநிதி சொல்றதை பாருங்க
சென்னை: திமுக கூட்டணி 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வெற்றியை, கலைஞருக்குச் சமர்ப்பிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி சொல்லி அடித்தது போல 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக, பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்ய முடியாமல் கிளீன் ஸ்வீப் செய்தது.

இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கழகத் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் வாக்காள பெருமக்கள். கழகத்தின் சார்பிலும் இந்தியா கூட்டணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் - தொண்டர்கள் - கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்.
கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வெற்றியை, நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குச் சமர்ப்பிப்போம்!.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
543 லோக்சபா தொகுதிகள் உள்ள நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 295 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பாஜக மட்டும் தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழக பாஜக தலைவர் முன்பு ஒரு பேட்டியில் வரும் லோக்சபா தேர்தலில் தென் தமிழகத்தில் இருந்து ஒரு திராவிட கட்சி தலைவர்கள் கூட டெல்லி செல்ல மாட்டார் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலையும் திமுகவிடம் தோல்வியை சந்தித்தார்.
இதேபோல் அதிமுகவும் இந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் மிகப்பெரிய ட்ஃப் கொடுத்தது. எனினும் திமுகவே வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications