NEET: “நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு”.. ஆன்லைன் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் Ban NEET என்ற இணைய வழி கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று தனது ஆதரவை வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் - தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகள், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கம் முதலே செயல்பட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்து கூட்டியக்கத்தினர் விளக்கி, அவரது ஆதரவைக் கோரினர்.
குறிப்பாக, நீட் எதிர்ப்பைத் தமிழ்நாட்டைக் கடந்து இந்திய அளவில் வலுப்படுத்தும் வகையில் 'Ban NEET' இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் விழிப்புணர்வுக் காணொலியை வெளியிடுவது, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரப்புரை மேற்கொள்வது, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தங்களது செயல்பாடுகள் குறித்து எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினர்.
நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்- தமிழ்நாடு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'Ban NEET' இணையவழிக் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவையும் பதிவு செய்தார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்! அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே "நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!" என்று போராடி வருகிறோம்.
அந்த இலக்கோடு Ban NEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் - தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்.
இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம். எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
