தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. ஸ்டாலின் vs விஜய்யா? அதிமுகவை முந்தும் தவெக.. சி வோட்டர் சர்வே
சென்னை: தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலினையே விரும்புவதாக 27 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் உள்ளார். அவர் முதல்வராக விருப்பம் தெரிவித்து 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா டுடே சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவிகித பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் வெப்பத்திற்கு நடுவே அரசியல் சூடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான நகர்வை நோக்கி செல்கிறது.

விஜய் முதல்வராக 18 சதவீதம் பேர் விருப்பம்
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழகத்தில் முதல்வராக அதிக விரும்பத்தக்க தேர்வாக மு.க ஸ்டாலினே இருப்பது இந்தியா டுடே சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் உள்ளார். இந்தியா டுடே சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று விருப்பப்படுவதாக 27 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விஜய் முதல்வராக வேண்டும் என்று 18 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு?
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவிதம் பேரின் ஆதரவு உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளின் படி, ஸ்டாலின் முதல்வராக வலுவான ஆதரவு இருப்பது தெரிகிறது. அதேபோல தவெக தலைவர் விஜய்க்கும் கணிசமான ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. இத்தனைக்கும் விஜய் ஒரு தேர்தலை கூட சந்திக்காத நிலையிலும் அவருக்கான ஆதரவு பிற தலைவர்களை விட கணிசமான அளவு அதிமாக உள்ளது.
செயல்பாடுகள் எப்படி உள்ளது?
தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்தும் சர்வே செய்து அதன் முடிவுகளையும் இந்தியா டுடே சிவோட்டர் வெளியிட்டுள்ளது. இதன்படி, 15 சதவீதம் பேர் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். 36 சதவீதம் பேர் திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். 25 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும், 24 சதவீதம் பேர் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 22 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தியாக உள்ளதாகவும், 22 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மிகவும் விரும்பும் தலைவராக ஸ்டாலின் இருப்பதையே இந்த சர்வே காட்டுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினை எது?
எடப்பாடி பழனிசாமி செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விக்கு 8 சதவீதம் பேர் மிகவும் திருப்திகரமாக உள்ளதாகவும், 27 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியாக உள்ளதாகவும், 32 சதவீதம் பேர் திருப்தி இல்லை எனவும், 33 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.
வாக்காளர்கர்கள் மத்தியில் எந்த பிரச்சினை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பெண்கள் பாதுகாப்பு என அதிக சதவீதம் பேர் கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பு என்றும், விலைவாசி உயர்வு என்று 12 சதவீதம் பேரும், போதை மற்றும் மது பிரச்சினை என 10 சதவீதம் பேரும், வேலை வாய்ப்பு இன்மை என்று 8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications