கல்வியில் மட்டுமல்ல.. எல்லா துறைகளிலும் தமிழ்நாடு தான் நம்பர் 1! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற தமிழ்நாட்டை, தொடர்ந்து நாம் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு சாட்சியாக "வேளாண்மையில் சிறந்த தமிழ்நாடு" அமைந்திருக்கிறது எனவும், பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் நாம் தான் முதலிடம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் வணிகத் திருவிழா 2025-ஐ தொடங்கி வைத்து, வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் என பல்வேறு வேளாண் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து காட்சிப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்," நேற்று முன்தினம் நடைபெற்ற, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதனை இன்றுவரையில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முக ஸ்டாலின்
அப்போது, கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற தமிழ்நாட்டை, தொடர்ந்து நாம் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு சாட்சியாக, அப்படி, இன்று இந்த விழா "வேளாண்மையில் சிறந்த தமிழ்நாடு" என்று சொல்லும்படியான விழாவாக அமைந்திருக்கிறது! இந்த விழாவை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து, உங்கள் எல்லோரையும் சந்திக்கின்ற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய இந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின் பேச்சு
வேளாண் விளைபொருட்களை, நேரடியாக சந்தைப்படுத்திட, இந்தக் கண்காட்சியும், கருத்தரங்குகளும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது! இந்த முன்னெடுப்பு, விவசாயிகளுக்கு புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய தளமாக இது அமைந்திருக்கிறது! இதனால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இன்னும் அதிகளவில் ஏற்படும். வேளாண் வணிகம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளால், விவசாயிகளின் வணிகத் திறன் மேம்படும்.
திராவிட மாடல் அரசு
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, வேளாண்மைத் துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம்! அப்படித்தான், நம்முடைய அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்!
வேளாண் வணிகத் திருவிழா
உழவர்களின் கருத்துக்களை விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்! தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில், திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம்! அதன் பலனாக இப்போது, வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறப்பதற்கு எப்படி லேட் ஆகும் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம்!
தமிழ்நாடு முதலிடம்
இந்த ஆண்டு, 5.66 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது! இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி! இதற்கு தேவையான உரங்களை, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்! இப்படி, தமிழ்நாட்டில் உழவர்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
உழவர் நலத்துறை
உழவர் பெருமக்களை அவர்களுடைய ஊரிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, பிரச்சினைகளை உடனே தீர்க்க "உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை" என்ற திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும், முகாம்கள் மூலமாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறோம்! இப்படியெல்லாம், நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் தான், கடந்த நான்கு ஆண்டுகளில், 456.44 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டியிருக்கிறோம்!
வேளாண்மை வளர்ச்சி
இன்னும் பெருமையோடு சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு எக்டருக்கு 2 ஆயிரத்து 835 கிலோவாக இருந்த உணவு தானிய உற்பத்தி, இப்போது, 2 ஆயிரத்து 857 கிலோவாக அதிகரித்திருக்கிறது! இந்த நான்கு ஆண்டு கால சாதனைகளை எல்லாம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் நாம் தான் முதலிடம்! மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம்! குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம்! இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்! இதற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு கிராமமும் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்று "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" என்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கினோம்!
பயிர் உற்பத்தி
இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில், பத்தாயிரத்து 187 கிராம ஊராட்சிகளில், 52 இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நான் பெருமையோடு சொல்கிறேன்... 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கிறோம்! அடுத்து, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், இதுவரைக்கும் 20 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 இலட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு
2025-26 ஆம் ஆண்டுக்கு, ஒன்றிய அரசு நெல்லுக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் விவசாயிகள் பெறும் வகையில் சாதாரண இரகத்துக்கு 131 ரூபாயும், சன்ன இரகத்துக்கு 156 ரூபாயும் உயர்த்தி வழங்கியிருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டு 297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் கரும்பு விலை மெட்ரிக் டன்னுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
பாசன நீர்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும், இதுவரை 29 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில், 8 ஆயிரத்து 370 கிலோ மீட்டர் நீளத்துக்கு, C மற்றும் D பிரிவு கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, கடைமடைக்கும் பாசன நீர் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வேளாண் வணிகத் திருவிழா
விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேளாண் வணிகத் திருவிழா, விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications