Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு vs டெல்லி என்பது நிரூபணம்!

MK Stalin

எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா?

தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டெல்லியே எடுக்கும் நிலை. இனி, டெல்லியின் முடிவே அவர்களது முடிவு!

தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக?

தமிழகத்திற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.

தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒரு போதும் டெல்லியின் ஆதிக்கத்தையும் அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்கமாட்டார்கள்.

சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்தது போல, தமிழகத்தையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அது போல் ஸ்டாலின் தனது உடன் பிறப்புகளுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாகக் கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன். வெற்றி நிச்சயம். அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம். அந்த உறுதியுடன்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தே தீரும்.

உங்களில் ஒருவனான என் மனதில் அந்த உறுதி இருக்கிறது. அதற்குக் காரணம், எத்தகைய எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்திடும் ஆற்றல் பெற்ற கழக உடன்பிறப்புகளான நீங்கள் உறுதுணையாக இருந்து உழைப்பதுதான். அதனால்தான் உங்களின் முகம் காணும்போது நான் உற்சாகமடைகிறேன்; ஊக்கம் கொள்கிறேன்; உத்வேகம் பெறுகிறேன். மார்ச் 17-ஆம் நாள் முதல், அண்ணா அறிவாலயத்தில், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். உங்களில் ஒருவனான என் முகம் காண நேர்காணலில் நீங்கள் எந்தளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதைவிடக் கூடுதல் ஆர்வத்துடன் உடன்பிறப்புகளான உங்களின் முகம் காண நான் விரும்புவதால்தான், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் பல மணிநேர அளவில் நேர்காணல் நடைபெறுகிறது.

முதல்நாள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகளிடம் நேர்காணல் நடத்தினேன். தமிழ்நாட்டிற்கு முன்பாகவே புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. புதுச்சேரி கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் புத்துணர்ச்சியையும் பெரும் நம்பிக்கையையும் காண முடிந்தது. இரண்டாவது நாள் (மார்ச் 18) தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த விருப்பமனு அளித்த ஏறத்தாழ 2,000 உடன்பிறப்புகளை நேருக்கு நேர் காண்கின்ற வாய்ப்பு அமைந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒவ்வொரு தொகுதிவாரியாக 9 மணி நேரத்திற்கும் மேலாகச் சந்தித்து நேர்காணலை நடத்தினேன். இடையில் சற்று நேரம் உணவு இடைவேளை என்றாலும், அந்த நேரத்திலும் தேர்தல் தொடர்பான பணிகளே நீடித்தன. மாலையில் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. 51 தொகுதிகளுக்கான நேர்காணல் நிறைவு பெற்ற இரவு 10 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் ஆர்வமும், அவர்களிடம் காணப்பட்ட எழுச்சியும் என் களைப்பை விரட்டி, உற்சாகத்தை அளித்தது.

மூன்றாவது நாளான (மார்ச் 19) நேற்று, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலிருந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களை நேர்காணல் செய்தேன். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகியவற்றை உள்ளடக்கிய கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் 52 தொகுதிகளுக்கான நேர்காணலை காலை தொடங்கி இரவு வரை நடத்தி முடித்தேன்.இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களே என்று அக்கறை கொண்டு, நான் சற்று ஓய்வெடுக்கலாமே என்று உடன் அமர்ந்திருந்த கழகத் தலைமை நிர்வாகிகளும், விருப்பமனு அளித்தவர்களும் தெரிவித்தார்கள். ஓய்வைவிட உழைப்புதான் உற்சாகத்துடன் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. நேர்காணலில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் உங்களில் ஒருவனான என்னை எப்படி உற்று நோக்கினார்களோ, அதுபோலவே விருப்பமனு அளித்து நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் உள்ளன்புடன் நானும் கவனித்தேன்.

உடன்பிறப்புகளின் முகம் பார்த்தே அவர்களின் மன ஓட்டத்தை அறியும் உணர்வை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார். நேர்காணலுக்காக அறிவாலயத்திற்கு வந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது, அவர்களுடைய தொகுதிகளைச் சார்ந்த, அறிவாலயம் பக்கமே வந்திராத கழகத்தின் ஆணிவேரான தொண்டர்களின் முகங்களும் என் மனதில் தோன்றின. தலைவர் முதல் தொண்டர் வரை அத்தனை பேரிடமும் ஒரே உணர்வு கொண்ட இயக்கம்தானே நம் திராவிட முன்னேற்றக் கழகம்!ஒவ்வொரு தொகுதிவாரியாக நேர்காணல் செய்தபோது, ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் மக்கள் பெற்றுள்ள பலன்கள்தான், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருக்கப்போகின்றன என்பதைச் சொல்லத் தவறவில்லை. ஒருவர், மகளிர் உரிமைத் தொகை பற்றி சொன்னால், இன்னொருவர் விடியல் பயணம் பற்றி விளக்கினார். மற்றொருவர், புதுமைப்பெண் என்றதும், உடனே, 'நான் முதல்வன்' திட்டத்தால் தங்கள் ஊரில் பயன் பெற்றவர்களைப் பற்றி அடுத்தவர் சொல்கிறார். தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, தாயுமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம் எனச் சாதனைகளால் நிறைந்த 5 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி ஒவ்வொருவரும் குறிப்பிட்டு, கழக ஆட்சிதான் தொடரும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.

சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி, கூடுதலான புதிய திட்டங்களையும் செயல்படுத்தி, மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற 'கனவுகள் மெய்ப்படும்' நிகழ்வில் 'தமிழ்நாடு 2030' என்கிற தொலைநோக்குப் பார்வையிலான 14 அம்சங்கள் கொண்ட திட்டத்தையும் உங்களில் ஒருவனான நான் அண்மையில் வெளியிட்டிருந்தேன்.

1. வீட்டு வசதித்துறையின் சார்பில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேர்த்து 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

2. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு.

3. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.

4. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, வெற்றிப்பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

5. உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்.

6. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றம்.

7. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா.

8. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்.

9. தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

10. கால்நடை - பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு - மீனவர்கள் வாழ்வு மேம்பாடு.

11. நகராட்சி நிருவாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்.

12. சிறு - குறு - நடுத்தரத் தொழில் துறை சார்பில், 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.

13. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம்.

14. கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள் என அந்த நிகழ்வில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

தமிழ்நாடு-2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும், கூடுதல் அம்சங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தேர்தல் அறிக்கை என்றால் அது நமது கழகத்தின் தேர்தல் அறிக்கைதான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+