ராகுல் பேசிய union of states.. ஏன் மிரளுகிறீர்கள் என கேட்ட முதல்வர்.. டிரென்டாகும் ஸ்டாலின் வீடியோ
சென்னை: மக்களவையில் ராகுல் காந்தி பேசிய union of States என்ற பேச்சுக்கு பிறகு தமிழக சட்டசபையில் ஒன்றிய அரசு என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம் மீண்டும் வைரலாகி வருகிறது.
Recommended Video
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி உரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்று மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. இதற்கு கூட்டாட்சி என்று அர்த்தம் என ராகுல் காந்தி பேசியிருந்தார். மேலும் தமிழக மக்களை பாஜகவால் ஒரு முறை கூட ஆள முடியாது என தெரிவித்திருந்தார்.

ஒன்றிய அரசு
இவரது பேச்சு காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சட்டசபை பேச்சும் தற்போது மீண்டும் பரவி வருகிறது. மத்திய அரசை திமுக பொறுப்பேற்றவுடன் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகிறது. "எங்களை ஒன்றிய அரசு என அழைத்தால் நாங்கள் உங்களை ஒன்றிய முதல்வர்" என்றே அழைப்போம் என பாஜகவினர் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர்.

தமிழக சட்டசபை
இதையடுத்து தமிழக சட்டசபையில் ஒன்றிய அரசு என ஏன் அழைக்கிறோம் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கினார். அவர் கூறுகையில் ஒன்றிய அரசு என சொல்வதை ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு.

ஒன்றியம்
சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும் என்றுதான் உள்ளது. India that is Bharat, shall be a union of states என்றுதான் இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

மாநிலங்கள் சேர்ந்தது
ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் அதனுடைய பொருள். எனவே ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் என முதல்வர் பேசியிருந்தார். அது தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications