வாக்குச்சாவடி முகவர்கள் நடமாடும் ஊடகமாக மாற வேண்டும்! இது டிஜிட்டல் காலம்! ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
''ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் பொறுப்பும் கடமையும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையே சேரும். தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. கழகத்தின் வெற்றிக்கு நீங்கள்தான் அடிப்படை.

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளை, வெட்டி ஒட்டி கழக ஆட்சியில் நடைபெற்றது போல பரப்பிடுவோரின் சதிச்செயல்கள் தேர்தல் நெருங்கவுள்ள சூழலில் இன்னும் தீவிரமாக நடந்தேறும்.
திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பேசி பேசி வளர்ந்த இயக்கம் நம் கழகம். எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம். மக்களோடு நெருங்கிப் பழகுபவர்கள் - பழக வேண்டியவர்கள் நீங்கள்தான்.
மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் தேவைகளையும் உள்ளபடியே அறிந்தவர்களும் நீங்கள்தான். இனி வருங்காலங்களில் கழக ஆட்சிக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாக நீங்கள் செயல்படப் போகிறீர்கள்.
இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு உடன்பிறப்புகளாகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை. உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பரப்புரையை - கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களும் கழக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திட கூடும். நம்மை அச்சுறுத்துவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் வகையில், உண்மை நிலையை எடுத்துரைத்து, கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் நிறைவேற்றப்படும் அளப்பரிய சாதனைகளையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் தொடர்ந்து எடுத்துரைத்திட இந்தப் பயிற்சிப் பாசறை உங்களுக்கு வழிகாட்டும். ''












Click it and Unblock the Notifications