மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கே நல்லதல்ல.. கட்சியே இருக்காது.. ஸ்டாலின் பரபர!
சென்னை: மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கே நல்லதல்ல என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிசியான பணிகளுக்கு இடையே தனியார் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கிடையேயான போர் என்றும், பாஜகவின் சித்தாந்தம் சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆகிய திராவிட இயக்கத்தால் போற்றி வளர்க்கப்பட்ட விழுமியங்களுக்கு எதிரானது என்றும், இந்தியாவைக் காப்பாற்ற பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜகவிடம் சரணடைந்த, சந்தர்ப்பவாத கட்சி என்றும், இரு கட்சிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றும் ஸ்டாலின் இந்தப் பேட்டியில் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, எதேச்சதிகார பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்றும், பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதும், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதுமே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா என்ற சொல்லே பிரதமர் வேட்பாளருக்கான முகம் என்றும் ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு திறமையான பிரதமர் இந்தியாவுக்குக் கிடைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவுக்கு எதிரான பாஜகவின் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பாஜகவின் பொய் பிரச்சாரத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை, எனது தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளில் 1, 500க்கும் மேற்பட்ட கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை தமிழக மக்கள் கண்டுள்ளனர் என்றும், 5ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசியுள்ள அவர், "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே நடைபெறாது. தேர்தல் ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரமாக மாற்ற பிரதமர் மோடி நினைப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் வாழும் இந்தியா என்ற எண்ணம் அழிந்துவிடும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கே நல்லதல்ல. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடி இருப்பார். ஆனால் பாஜக என்ற கட்சி இருக்காது என்றும், இது ஒரு அரசியல் தலைவரின் அரசியல் பேச்சு என சாதாரணமாக ஒதுக்கிவிடாதீர்கள், இது உண்மை" என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications