"அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இது" எதிர்க்கட்சி தலைவர்களின் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைக் காப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடியதற்காக முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்புக் காவலில் அடைத்துள்ளது.

ஆனால், தேசத் துரோகச் செயலுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், Z+ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார்! இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!
SIR-க்குப் பின்னணியில் உள்ள சதி முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனியும் அதை மறைக்க முடியாது! டெல்லியைப் பூட்டி வைப்பதாலோ, இணையச் சேவையைத் துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை நாள்களுக்குத்தான் ஒன்றிய அரசால் முடக்கி வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள மூடர்கூடத் த.வெ.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் துடிக்கிறது. அதற்காக, SIR-க்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராடும் செயற்பாட்டாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். SIR நிறுத்தப்பட வேண்டும். இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் உரிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
