எங்களை சீண்டி பாக்காதீங்க... பின்னாடி வருத்தப்படுவீங்க... முதல்வரை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அதிமுக அரசின் அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.க நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி ஜனவரி 10 வரை தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி தி.மு.க.வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. தி.மு.க.வை சீண்டிப் பார்க்க வேண்டாம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
அதிமுக அரசு உரிய காலத்தில் கிராம சபை கூட்டங்களை நடத்தத் தவறிய காரணத்தால்தான் தி.மு.க. மாதிரி கிராமசபைக் கூட்டங்கள் நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மக்கள் ஆதரவு
அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்பிற்கினிய தமிழ் மக்களைத் தேடி16,500 ஊராட்சிகளிலும் தி.மு.க. கூட்டம் நடத்துகிறது இதில் பங்கேற்க மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்குப் பேராதரவளித்து, ஆட்சி மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்துவோம் என்று உலகறியச் சொல்கிறார்கள். "அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்" என்கிற தீர்மானத்திற்கு ஊராட்சிகளில் நூறு - ஆயிரமென உவகையுடன் கையெழுத்திட்டு மாநில அளவில் பல லட்சக்கணக்கில் என எண்ணிக்கையை உணர்த்துகிறார்கள்.

அச்சம்
டிசம்பர் 23ம் தேதி 1100 என்ற அளவில் நடந்த கிராம - வார்டு சபைக் கூட்டங்கள், 24ம் தேதி 1600-க்கும் அதிகமாக நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள். அதிமுக ஆட்சியின் அவலத்தைப் பற்றிக் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள். முதல் 2 நாட்களிலேயே இத்தனை வரவேற்பு என்றால், இன்னும் ஜனவரி 10 வரை இந்த ஊராட்சிக் கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணி நோக்கியே சென்றுவிடக்கூடும் என்ற அச்சம், ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது.

உறக்கம் கலைந்தது
200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அனைத்து அமைச்சர்களில் ஒருவரும் வெற்றிபெறக்கூடாது என்பது 2-வது இலக்கு. இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் உறக்கம் நிரந்தரமாகக் கலைந்து விட்டது.

பயன்படுத்துகிறார்
பத்தாண்டுகளாக நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்தியம்பிட எதுவும் இல்லை என்பதால், தி.மு.க. நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை அரசு அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் முனை முறிந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். அவரது உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். டிசம்பர் 24-ல் பொழுது சாய்ந்தபிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமசபை என்ற பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் தனியாரும் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
நடுங்குகின்றனர் இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு கட்டிக் கொண்டதா? அரசு சார்பில், முழுமையான அளவில், எல்லா அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திராணியின்றி, தேர்தல் நடைபெற்ற ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்களை நடத்தும் வக்கின்றி வழியின்றிப் போன ஆட்சியாளர்கள், தி.மு.க.வினர் மக்களைச் சந்தித்தால் அனைத்துக் கிராமங்களிலும் அதற்குப் பேராதரவு பெருகினால், தொடை நடுங்கி, தடை போடுவதா?

சொல்லுங்கள்
அ.தி.மு.க. அரசின் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று நான் பதிலறிக்கை வெளியிட்டேன். தி.மு.க.வினர் கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்டு, ஆட்சியாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்கள் என்றால், அ.தி.மு.க சார்பில் அதே போல ஊராட்சிகள் தோறும் - வார்டுகள் வாரியாகவும் கூட கூட்டம் நடத்தி, கடந்த பத்தாண்டுகளாக நடந்த சாதனைகள் என்ன என்பதை எடுத்துரைக்கலாமே? கடந்த 4 ஆண்டுகளாக, ஜெயலலிதாவையே மிஞ்சக் கூடிய வகையில் நடத்தும் ஆட்சியின் சாதனைகள் என்னவென்று சொல்லலாமே? ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்புக்குப் புடைசூழ நிற்க, தோள் தட்டிச் சொல்லலாமே?

மக்களின் இயக்கம்
ஆனால் அதைச் செய்யும் நெஞ்ச உரமின்றி, நேர்மைத் திறனின்றி தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அ.தி.மு.க. அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்? இத்தகைய அடக்குமுறைகளை, எத்தனையோ காலமாகச் சந்தித்துத்தான் தி.மு.க இன்றும் வலிவுடனும் பொலிவுடனும் மக்களின் பேரியக்கமாகத் திகழ்கிறது.

அண்ணாவின் இயக்கம்
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்" என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கினார் பேரறிஞர் அண்ணா. அதற்காகவே தி.மு.க.வைத் தடை செய்யும் நோக்குடன் 1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சாதுரியமாகத் தனிநாடு கோரிக்கையைக் கழகம் கைவிட்டது. "பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன" என்பதை ஏற்கத் தக்க வகையில் கழகத்தினருக்கும் மக்களுக்கும் விளக்கினார் அண்ணா. அதன் விளைவு, அடுத்து நடந்த 1967 பொதுத்தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு' என்றாக்கி, டெல்லிக்கு ஏற்ற பதிலடி தந்த அண்ணாவின் இயக்கம் இது.

நாடெங்கும் வெற்றி
அந்த அண்ணனின் தம்பியான ஆருயிர்த் தலைவர் கலைஞர், ‘காஞ்சித் தலைவன்' என்ற படத்தில் ‘வெல்க காஞ்சி.. வெல்க காஞ்சி' என்ற பாடல் எழுதினார். காஞ்சி என்பது அண்ணா பிறந்த ஊர் என்பதால் அவரைத்தான் அது குறிக்கிறது என்ற குதர்க்கமான அரசியல் காரணத்தை முன்வைத்து, திரைப்படத் தணிக்கைத் துறையினர் அதனை நீக்கச் சொன்னார்கள்; தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவிக்கவில்லை; ‘வெல்க காஞ்சி' என்பதை ‘வெல்க நாடு.. வெல்க நாடு' என்று மாற்றி அமைத்தார். காஞ்சியில் வெற்றி என்றிருந்த பாடல், தணிக்கைத்துறையின் நெருக்கடிக்குப் பிறகு, நாடெங்கும் வெற்றி என்பதாக எதிரொலித்தது.

மக்கள் சபை கூட்டம்
பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர் தலைவர் கலைஞர். கலைஞரிடமிருந்து, உழைப்பைத் தானமாகப் பெற்றிருப்பவன் நான். அதனால், தடைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், பயந்து ஒதுங்கும் வழக்கம் என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. எப்படி, ‘வெல்க காஞ்சி' என்பது ‘வெல்க நாடு' என வெற்றியின் பரிமாணங்களை விரிவாக்கியதோ அதுபோல, கிராம சபைக் கூட்டம் என்பது இனி, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயருடன் தொடர்ந்து நடைபெறும் என்பதை அறிவித்திருக்கிறேன்.

வேதனையை கூறினார்கள்
அறிவிப்போடு நின்று விடாமல் இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் வார்டுசபைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் அன்பான வரவேற்பினை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த கருத்துகளைக் கேட்டறிந்தேன். கிழக்குக் கடற்கரையை ஒட்டிய மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளத் தொழில், விவசாயம், வணிகம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அனைத்தும் எந்த அளவு அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிந்து கிடக்கின்றன என்பதை மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் வேதனையோடு எடுத்துச் சொன்னார்கள். இதேபோல் திமுக முன்னோடிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக இன்றும் மக்களைச் சந்தித்தார்கள்; நாளையும் சந்திப்பார்கள். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கிராமசபைக் கூட்டங்கள் தொடங்கப்பட்ட டிசம்பர் 23-ஆம் தேதியன்றே ஆறு ஊராட்சிகளிலும், நேற்று 6 ஊராட்சிகளிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளார்.

இது நிச்சயமம்
மக்களைச் சந்திப்பதில் நமது கழகத்தவர் எத்தனை ஆர்வத்துடன் செயல்படக் கூடியவர்கள் என்பதற்கு இதுவே சான்று! இதே எழுச்சியுடன் ஜனவரி 10 வரை, 16,500 ஆயிரம் ஊராட்சிக் கூட்டங்களை நடத்தி நிறைவேற்றும்வரை இது நிச்சயமாகத் தொடரும். அதனை அதிகார அத்துமீறல்களால் தடுக்க முடியாது என்பதை விளக்கும் வகையில், கழக அமைப்புச் செயலாளர் - மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி .ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கியிருப்பதுடன், ஊடகத்தினரிடமும் அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மாண்புமிகு அவை
அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டம் என்பது என்ன - அதனை எந்தெந்த விதிமுறைகளுடன் நடத்த வேண்டும் என்பதையும், அத்தகைய முறையில் நடத்தப்படாத கூட்டங்களை, கிராமசபைக் கூட்டங்கள் என்ற பெயரில் இருந்தாலும் அதை அரசின் கிராமசபைக் கூட்டங்களாகக் கருத முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்ததையும் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றம் என்பது அரசியல் அமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ள மாண்புமிகு அவை. அதேநேரத்தில், மாதிரி நாடாளுமன்றம் என்ற பெயரில் கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் நாடாளுமன்றம் என்ற அமைப்புகள், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்காக, நாடு முழுவதும் இயங்குகின்றன.

சீண்டிப் பார்க்க வேண்டாம்.
அதுபோலத்தான், தி.மு.க நடத்துவதும் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள். உண்மையாக நடத்த வேண்டியவர்கள், உரிய காலத்தில் உரிய முறையில், நடத்தத் தவறிய காரணத்தால் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள் தி.மு.க நடத்துகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி தி.மு.க.வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள்; நாளை இருக்கப் போகிறவர்கள். சட்டத்தை அறிந்தவர்கள்; அதனைப் பெரிதும் மதிப்பவர்கள். பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் தி.மு.க.வை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

ஜனவரி 10 வரை தொடரும்
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் உங்கள் ஆட்சிக்கு எதிராகக் குமுறத் தொடங்கிவிட்டனர்; எரிமலையாய்க் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் வாயை மூடலாம் என நினைத்து, தி.மு.க.வின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கழக நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications