"பாஜகவால் ஸ்கோர் செய்யும் ஸ்டாலின்".. திமுகவிற்கு 25+ கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு.. இன்று சந்திப்பு
சென்னை: மத்திய அரசின் எஃப்சிஆர்ஏ எனும் 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவிற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலையில் முதல்வர் ஸ்டாலினை 25க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு நடுவே மத்திய அரசு எஃப்சிஆர்ஏ எனும் 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா'வை ( Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill) கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. . குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து இந்த மசோதா மீதான விவாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் எஃப்சிஆர்ஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த காரணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று காலை 8.45 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
இந்த FCRA சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மையினருக்கான என்ஜிஓக்கள் பாதிக்கப்படும் என்று பலரும் கவலை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்த மசோதாவில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதுது.
அதுமட்டுமின்றி சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை கட்டுப்படுத்த அல்லது அவற்றை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா உள்ளதாக சிறுபான்மை பிரிவினர் கவலை தெரிவித்தனர். இதனால் இந்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் பலரும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அகில இந்திய கத்தோலிக்க யூனியன் உள்பட பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர் கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து தான் அந்த மசோதா மீதான விவாதம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இந்த மசோதாவிற்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்த நிலையில் தற்போது 25+க்கும் அதிகமான கிறிஸ்தவ அமைப்பினர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளன. இதன்மூலம் பாஜகவால், முதல்வர் ஸ்டாலின் ஸ்கோர் செய்கிறார்.
பொதுவாக தமிழகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தான் ஆதரவாக உள்ளது. சில அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாக நிற்கின்றன. இருப்பினும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில் பல சிறுபான்மை அமைப்பினர் திமுக நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று 25க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது என்பது வரக்கூடிய சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையலாம்.












Click it and Unblock the Notifications