புட்டு புட்டு வைத்து.. ஆதாரங்களை அடுக்கிய ஸ்டாலின்.. மறுபக்கம் பிடிஆர்.. மிரண்டுபோன அதிமுக
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாத அதிமுக திட்டங்களை பட்டியலிட்டார்
சென்னை: இன்று சட்டப்பேரவையில் 2 விதமான அதிரடிகள் நடந்துள்ளன.. இரண்டுமே அதிமுகவுக்கு எதிரான விஷயங்கள்.. ஸ்டாலின் ஒரு பக்கம், பிடிஆர் மறுபக்கம் என அதிமுகவை வெலவெலக்க செய்துவிட்டார்கள்..!
இந்த முறை பட்ஜெட் ஆரம்பித்ததுமே, சில முக்கிய அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட போவதாக தெரிவித்திருந்தது.. ஆனாலும், அதற்கு முன்பே முந்தி கொண்டது அதிமுக.
பதவியேற்று இத்தனை நாள் ஆகியும் எதையுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டி, ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி முடித்தது..

ஆரம்பம்
மேலும், கூட்டத்தொடர் ஆரம்பித்தாலும், வெளிநடப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கலாம் என்றும் ஒரு முடிவை செய்து வைத்திருந்தாகவும் ஒரு தகவல் கசிந்தது... அதற்கேற்றபடி முதல்நாளே அதிமுகவும் வெளிநடப்பு செய்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் விவசாய கடன் மற்றும் நகை கடன் குறித்த விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்..

விவசாயிகள்
அதில், "எந்த காரணத்தைக் கொண்டும், நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதிகளிலிருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்று ஏற்கனவே சொன்னேன்.. நீங்க கேட்கலாம், விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்வோம், நகை கடனை தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே, அதற்கெல்லாம் மழுப்பலான பதிலை சொல்லியிருக்கின்றீர்களே என்று.. ஆனால், உறுதியாக சொல்கிறேன்..

முறைகேடு
அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன... விவசாயிகளுடைய பயிர் கடனை தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டு பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும்.

மறக்கவில்லை
உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை - நாட்டு மக்களும் மறக்கவில்லை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள் - பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தந்தீங்களா?
இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீங்களே, தந்தீங்களா? ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீங்களே, கொடுத்தீங்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீங்களே? யாருக்காவது கொடுத்திருக்கீங்களா? குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீங்களே, அது கொடுக்கப்பட்டதா?

என்ன ஆச்சு?
எல்லாருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி தந்தீங்களே? அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீங்களே? அதை கொடுத்தீங்களா? பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்தீர்களா அனைத்து பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம் - கட்டித் தருவோம் என்று சொன்னீர்களே.. எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா?

மெட்ரோ ரயில்
அனைத்துப் பொது இடங்களிலும் வைபை வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீங்களே.. அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்க.. டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்களே.. அதை அமைத்தீர்களா? பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அதை எங்கேயாவது உருவாக்கியிருக்கிறீர்களா? சென்னையிலே மோனோ-ரயில் விடப்படும் என்று சொன்னீங்களே, அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தைத்தான் நிறைவேற்றினீர்கள்..

முறைகேடுகள்
விவசாயிகளுடைய பயிர்க் கடன், நகைக்கடனை பொறுத்தவரையில், எங்கெங்கு முறைகேடு நடந்திருக்கிறது, எங்கெங்கு தவறுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர், தன்னுடைய துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசுகிறபோது, நிச்சயமாக அவை குறித்து ஆதாரப்பூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார்.. தேர்தல் நேரத்தில் வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய லட்சியம்.. அதுதான் எங்களுடைய பணி.. அதனால், யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

அதிமுக
முன்னதாக பேசிய அதிமுக எம்எல்ஏ ஆர்பி உதயகுமார், அரசின் நிதிநிலை அறிக்கை, தாய் பூனை, குட்டியை கவ்வுவது போல் அல்லாது எலியை கவ்வுவது போல் இருப்பதாக மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.. மேலும் அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

பிடிஆர்
இதற்கு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.. அப்போது, "இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய் மதிப்பையும், 5 வருடத்திற்கு முன்பு இருந்த ஒரு ரூபாய் மதிப்பினையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது.. திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காதது, செயல்திறன் குறைவு, உற்பத்தி கடன் ஆகியன அதிகரித்ததன் விளைவாக தான் பண வீக்கம் அதிகமாகியுள்ளது..

அறிவிப்பு
திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகையில் 3 அல்லது 4 சதவீதம் மாறுபாடு ஏற்படலாம், ஆனால் 40 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கிறது.. சட்டப்பேரவை விதி 110ன் கீழ், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவற்றில் செயல்படுத்தப்பட்டவை குறித்து பேரவையில் அறிவிக்க போகிறேன்" என்று பிடிஆர் தெரிவித்தார்.

அதிமுக
அதாவது, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை ஸ்டாலின் இன்று பட்டியல் போட்டுள்ள நிலையில், இனி அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது எவை என்பது மட்டும் இன்னொரு லிஸ்ட் போட்டு சொல்லப்போறாராம் பிடிஆர்.. இதுதான் அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்து துறைரீதியாக அமைச்சர்கள் அந்தந்த மான்ய கோரிக்கையின் மீது எடுத்து வைப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சொல்லி உள்ளதும், அதிமுகவுக்கு மேலும் ஜெர்க்கை தந்துள்ளது..!












Click it and Unblock the Notifications