அரசு அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைக்கும் அதிகாரம் எம்எல்ஏவுக்கு கிடையாது – சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை திமுக எம்எல்ஏவாக இருந்த சிஎம்பி எழிலரசன் மிரட்டியதாக 2019ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்த நிலையில்''வருவாய்த்துறை அதிகாரிகளால் எம்எல்ஏவை மிரட்ட முடியாது என்றால் எம்எல்ஏவாலும் அதிகாரிகளை மிரட்ட அடிபணிய வைக்க முடியாது'' என நீதிபதி கூறியது கவனம் பெற்றுள்ளது.
திமுகவின் முன்னாள் எம்எல்ஏ சிஎம்பி எழிலரசன். இவர் கடந்த 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களின்போது திமுக சார்பில் காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2019ம் ஆண்டில் எம்எல்ஏவாக இருந்தபோது சிஎம்பி எழிலரசன் சர்ச்சையில் சிக்கினார். காஞ்சிபுரம் தேவராஜசாமி கோவிலில் புகழ்பெற்ற அத்திவரதர் விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கோபமான சிஎம்பி எழிலரன் கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி மாவட்ட கலெக்டரின் 'கேம்ப்' அலுவலகம் சென்றார். அவருடன் ஆதரவாளர்களும் சென்றனர்.அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கலெக்டர் மீட்டிங்கில் உள்ளதாக கூறினார்கள். அப்போது அதிகாரிகளுக்கும், எம்எல்ஏவாக இருந்த சிஎம்பி எழிலரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை எழிலரசன் திட்டினார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிஎம்பி எழிலரசன் தங்களை தாக்க வந்ததாகவும், அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதற்கு கதையை முடித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீசார் சிஎம்பி எழிலரசன் மீது வழக்கப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சிஎம்பி எழிலரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி வி லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் எம்எல்ஏ சிஎம்பி எழிலரன் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார். இந்த சமயத்தில் நீதிபதி லட்சுமிநாராயணன் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையேயான உறவு முறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பகசில முக்கிய விஷயங்களை கூறினார்.
''வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள் எம்எல்ஏவை மிரட்ட முடியாது என்றால் அதேபோல் தான் எம்எல்ஏவும் அதிகாரிகளை மிரட்ட முடியாது. அதிகாரிகளை அடியணிய வைக்க முடியாது. எம்எல்ஏ என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி. அரசு அதிகாரிகள் என்பவர்கள் சட்டம், கொள்கைகள் மற்றும் நிர்வாகம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கொண்டவர்.
ஜனநாயக அமைப்பில் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முற்றிலுமாக வெவ்வேறு பொறுப்புகளை கொண்டவர்கள். மக்கள் பிரதிநிதிகளால் அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கலாம். பொதுமக்களின் குறைகளை முன்வைக்கலாம். நிர்வாக தோல்விகள் குறித்து விளக்கம் கோரலாம்.
ஆனால் மக்கள் பிரதிநிதி என்ற அதிகாரத்தை, அதிகாரிகளை அச்சுறுத்துவதற்கோ அல்லது மிரட்டுவதற்கோ பயன்படுத்தும் உரிமையாக மாற்றிக்கொள்ள முடியாது. அரசு அதிகாரிகளை அச்சுறுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது அவர்கள் தங்கள் அலுவல் பணிகளை செய்வதைத் தடுப்பதற்கு சமமானது. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு ஊழியர்களிடையே அச்சத்தை உருவாக்க முடியாது'' என நீதிபதி லட்சுமி நாராயணன் குறிப்பிட்டு காஞ்சிபுரம் முன்னாள் திமுக எம்எல்ஏ சிஎம்பி எழிலரசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
