“பதவியே வேணாம்”.. திருட்டு ரயிலா? “அந்த வரி” நியாபகம் வரனும்! இது கலைஞருக்காக -எம்பி அப்துல்லா பளார்
“நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!”
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி வந்ததாக ஒரு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில் அதை விமர்சித்து கடந்த சில நாட்களுக்கு முன் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் அவர் அது தொடர்பாக மீண்டும் விளக்கமளித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி குறித்து சமூக வலைதளங்களில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் கருணாநிதி திருட்டு ரயிலில் சென்னை வந்தார் என்பது.
ஆதாரமற்ற இந்த தகவல் வதந்தி என பல முறை நிரூபிக்கப்பட்டும் தொடர்ந்து இதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இதுகுறித்து முகநூலில் காட்டமான பதிவை வெளியிட்டார்.

2 பாயிண்டு
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "கலைஞர் திருட்டு ரயிலில் தான் வந்தார்னு நீ சொன்னீன்னா...
1. அதை அவரே எங்காவது பேசி எழுயிருக்க வேண்டும் - ஆனால் எந்த இடத்திலும் அவர் அப்படி பதிவு செய்யவில்லை.
2. சம்மந்தப்பட்ட டி டி ஆர் யாரேனும் அவரை தான் பிடித்ததாக சொல்லியிருக்கணும்..எழுதி இருக்கணும் - ஆனால் எந்த ஒரு டிடிஆரும் அப்படி பதிவு செய்யவில்லை.

சர்ச்சை கருத்து
மேலே சொன்ன ரெண்டு பாயிண்ட்டும் இல்லாம போனதால மூனாவதா ஒரே ஒரு ஆப்ஷன் தான் இருக்கு!!" என்று கூறி அவர் அடுத்து எழுதி இருந்த வரிதான் விவாதப் பொருளாகி இருக்கிறது. திமுக எம்பி தரக்குறைவாக பதிவிட்டு உள்ளதாகவும், பெண்களை அவமதித்துவிட்டதாகவும் ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அவர் கருணாநிதியையே அவமதித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். சிலர் எம்பியாக இருந்துகொண்டு இவ்வாறு பேசலாமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

3 நாளாக இதே கேள்வி
இந்த நிலையில் இதுகுறித்து அவர் முகநூலில் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "ஒரு எம்பியாக இருந்துட்டு நீங்க இப்படி பேசியிருக்கலாமா!?''... இதுதான் கடந்த மூன்று நாட்களாக பலரும் என்னை நோக்கி எழுப்பும் கேள்வி. நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!

பதவியே தேவையில்லை
தலைவர் கலைஞரை இழித்துரைக்கும் பழித்துரைக்கும் ஆட்களுக்கு நான் அவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல என் பதவி தடையாக இருக்குமானால் அப்படி ஒரு பதவியே எனக்கு தேவையும் அல்ல!! நான் இப்படி பேசுவதால் தலைவர் கலைஞர் மண்ணில் இருந்து எழுந்து வந்து என்னைப் பாராட்டப் போவதும் இல்லை... தான் இறந்த பிறகும் ஒருவன் தன்னை தாங்கிப் பிடிக்கிறான் என்பது அவருக்கு இனி தெரியப் போவதும் இல்லை!!!

இதுதான் நியாபகம் வரும்
இது அவரால் பயன் பெற்ற கடைநிலை தொண்டனின் உணர்ச்சி.. எம்பியின் உணர்ச்சி அல்ல! இதெல்லாம் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. இனி கலைஞர் திருட்டு ரயிலில் வந்தார் என பொய்யான அவதூறைச் சொல்லும் ஒவ்வொருவருக்கும் இந்த உண்மையை சொன்ன அவர்கள் பாட்டி நினைவும் சேர்ந்தே வரும் இல்லையா!! அந்த நினைவு வரும் வரை இந்த அப்துல்லாதான் தொண்டனாக கலைஞரை இன்னமும் தாங்குகிறான் என்று அர்த்தம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications