நெருக்கடி காலத்தில் சிஎம் ஆகுறீங்க.. கேர்ஃபுல் - ஸ்டாலினுக்கு 'அட்வைஸ்' வாழ்த்து அனுப்பிய கமல்
சென்னை: தனிப்பெரும் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ல் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞருக்கு பிறகு திமுக சார்பில் ஸ்டாலின் முதல்வராகிறார்.

காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளும் பல இடங்களில் வெற்றியும், முன்னிலையும் என பலமான கூட்டணி வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளன.
அதேசமயம், இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக போன்றவை ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டும் அக்கட்சி லீடிங்கில் இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட, மநீம கைவசம் இருந்த ஒரேயொரு வாய்ப்பும் காணாமல் போனது.
இந்த சூழலில், கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், "பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்" என்று கமல் டீவீட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications