2 பென்ஸ் உள்பட 4 கார் இருக்கு.. ஆனாலும் சட்டசபையில் Innova கார் கேட்ட மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ!
சென்னை: தமிழக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் பராமரிப்பு செலவுக்காக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து 2 பென்ஸ் உள்பட 4 கார்களை வைத்துள்ள மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி சண்முகன் பேசும்போது, ''கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 12ம் தேதி காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கும்படி கேட்டார்.

இதுதொடர்பாக ஜோதிமணி ''நான் 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். பஸ், ரயில் உள்ளிட்டவற்றில் வருவதற்கு அலோவன்ஸ் கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் (கார்) கிடையாது. வாடகை வண்டியில் தான் வருகிறேன். இதனால் கார் வழங்க வேண்டும். 2வது, ஒரு செயலாளரை கையில் வைத்து கொண்டு பணி செய்யும் வகையில் வசதி இல்லை. இப்படித்தான் முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்'' என்று பேசினார்.
இந்த கோரிக்கையை இன்று முதல்வர் விஜய் நிறைவேற்றினார். இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டசபையில் வெளியிட்டார். அதில்,''அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்திற்கு டிரைவர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியாக வழங்கப்படும். அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும்'' என்றார். இதனால் அனைத்து எம்எல்ஏக்களும் ஹேப்பியாகி உள்ளனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ பி சண்முகன் பேசினார். தன்னிடம் 2 பென்ஸ் உள்பட மொத்தம் 4 கார்கள் இருக்கும் நிலையில் அவர் கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக எம்எல்ஏ பி சண்முகன் கூறியதாவது:
''எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து அமர்ந்துள்ள முதல்வரே. கோரிக்கை நியாயமான கோரிக்கையாக இருந்தால்.. அது மக்களிடம் இருந்து வந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வந்தாலும் சரி.. உடனடியாக நிறைவேற்றப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை நமது முதல்வர் நிரூபித்துள்ளார்.
அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்தை தாங்கிப்பிடிக்கிறார் என்ற பெருமையோடு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்கிறார்கள். அனைவருக்கும் நன்றி '' என்று பேசியுள்ளார்.
இப்படி பேசி உள்ள மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏவிடம் மொத்தம் 4 கார்கள் உள்ளதாக அவர் தனது சட்டசபை தேர்தல் வேட்புமனுவில் இணைக்கப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அதில் 2014ம்ஆண்டில் ரூ.12 லட்சத்துக்கு மெர்சிடஸ் பென்ஸ் ஏ கிளாஸ் எனும் காரை வாங்கியதாகவும், அதன்பிறகு 2016ம் ஆண்டில் ரூ.30 லட்சத்துக்கு மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ 250 GLE கார் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 2017 ம் ஆண்டில் டொயொட்டா இன்னோவா கிரிஸ்டா காரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியதாகவும், அதன்பிறகு வோல்ஸ்வாகன் அமியோ காரை ரூ.5 லட்சத்துக்கு வாங்கியதாகவும் கூறியுள்ளார். இப்படி 4 கார் வைத்திருந்தாலும் கூட அவர் எம்எல்ஏக்களுக்கு இன்னோவா கார் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
