மோடி, அமித்ஷா அண்ணாமலையை நம்பவில்லை.. ‘கப்சிப்’.. டெல்லியில் நடந்தது என்ன? விளக்கும் பத்திரிகையாளர்!
சென்னை : கூட்டணி பற்றி பேச வேண்டாம் கட்சியை வளர்ப்பதைப் பாருங்கள் என பாஜக தலைமை அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்துவிட்டது. பாஜகவினர் இப்படி பேசுவது, அதிமுகவுக்கு அதிக சீட் கேட்டு பிரஷர் கொடுப்பதற்காகத்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
டெல்லி சென்றுவிட்டுத் திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூண்டை விட்டு கிளி பறக்கத் தயாராகிவிட்டது, அவரவர் கட்சியை வளர்ப்பதைத்தான் பார்ப்பார்கள், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை எனத் தெரிவித்தார்.
என்ன முடிவில் இருக்கிறார் அண்ணாமலை? டெல்லி அவருக்கு என்ன சொல்லி அனுப்பி இருக்கிறது என்கிற கேள்விகளுக்கெல்லாம் பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கிளப்பி விட்டுத்தான் டெல்லிக்குச் சென்றார் அண்ணாமலை. டெல்லியில் இருந்து வந்த பிறகு, கூட்டணி விவகாரம் பற்றி டெல்லி தலைமை தான் முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளார் அண்ணாமலை. அப்படியென்றால் டெல்லி, அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டது. இதைப் பற்றி பேசத் தேவையில்லை, கட்சியை வளர்ப்பதைப் பாருங்கள் என தலைமை அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்துவிட்டது. இப்போது இதுபோன்றெல்லாம் பாஜக பேசுவது, அதிமுகவுக்கு அதிக சீட் கேட்டு பிரஷர் கொடுப்பதற்காகத்தான்.

பாஜக குறி
அதிமுகவுக்கு பாஜகவை விட்டால் வேறு வழியில்லை. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என அனைவருமே பாஜகவுடன் கூட்டணி அமைக்கவேண்டிய இடத்துக்கு தள்ளப்படுகிறார்கள். கேபி முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் பாஜக உடனான கூட்டணியை எதிர்த்தாலும், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என பலரும் பாஜகவுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இன்று ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் அண்ணாமலை. மேகாலயாவில் தேர்தலுக்கு முன்பு ஊழல் நம்பர் 1 என கான்ராட் சங்மாவை விமர்சித்தார் அமித்ஷா. இப்போது, அவருக்கு ஆதரவு அளித்துள்ளது பாஜக. அதிகாரம் இல்லாவிட்டால் தங்கள் கொள்கைகளைப் பரப்ப முடியாது என்பதால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறது பாஜக.

அப்பதான் வழிக்கு வருவாங்க
அண்ணாமலை இன்று தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் கர்நாடகாவில் ஒப்பந்ததாரர்கள் எல்லாம் பாஜக ஆட்சியில் 40% கமிஷன் கேட்கிறார்கள் என்று குற்றம்சாட்டி PayCM என போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் கேட்டது தான் தன் மரணத்திற்குக் காரணம் என ஒரு கான்ட்ராக்டர் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரூ. 8 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணைக்கு அழைத்து 10 மணிநேரம் விசாரிக்கும் அமலாக்கத்துறை, பாஜக எம்.எல்.ஏ மகனை அழைத்து விசாரித்ததா? இவ்வளவு ஊழல் புழங்கும் கர்நாடகாவில் தான் பாஜகவுக்கு ஆதரவாக வேலை பார்க்கிறார் அண்ணாமலை. ஊழலைப் பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவுடன் அதிக சீட்களை வாங்க வேண்டும், ஊழல் கட்சி என்றெல்லாம் விமர்சித்தால் தான் அவர்கள் வழிக்கு வருவார்கள் என்ற திட்டத்திலேயே அண்ணாமலை செயல்படுகிறார்.

டெல்லிக்கு தெரியும்
பாஜக தனித்துப் போட்டியிடும் வலிமையில் இருப்பதாக அண்ணாமலை சொல்வதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நம்பவில்லை. உள்ளாட்சி தேர்தலில் 40% இடங்களில் தான் பாஜக போட்டியிட்டது. அதில் சுமார் 300 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் கன்னியாகுமரி, கோவை பகுதிகளில் தான் 200 இடங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கட்சி வளர்ந்திருக்கிறதா என்பதை அண்ணாமலையை விட டெல்லி நன்றாகவே அறியும். இங்கிருந்து உடனுக்குடன் பாஜக நிலைமை பற்றி டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றுகொண்டிருக்கிறது. 2024 தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என டெல்லி தலைமை அண்ணாமலைக்கு க்ளீயராக சொல்லி அனுப்பி இருப்பார்கள். அதன்படியே, டெல்லி சென்று வந்த பிறகு அண்ணாமலை பேச்சு மாறி இருக்கிறது.

எதிர்ப்பு வாக்குகள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்றெல்லாம் அண்ணாமலை இனி பேசமாட்டார். இங்கு திமுக + காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. அதற்கு எதிரான ஓட்டுகளை பெற வேண்டும் என்றால் எதிரில் ஒரு பலமான அணியை அமைக்க வேண்டும். அதிமுக தனியாக நிற்கும்போது பாமகவும் கூட்டணிக்கு வருமா என்று சொல்ல முடியாது. சீமான் ஒருபக்கம் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதால், பாஜக தனியாக நின்றால் ஓட்டுகள் கிடைக்காது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்தால் அது பாஜகவுக்கு தான் பாதகம். ஓரணியாக இருந்தால் தான் திமுக எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாகப் பெற முடியும். அந்தவகையில் பாஜக தலைமையும் அதிமுக உடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications