ஜனவரி 9ல் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு.. நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்.. பின்னணி என்ன?
சென்னை: ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரலாம் என்று தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அக்டோபர் 11ஆம் தேதி மதுரையில் தொடங்கிய இந்த சுற்றுப்பயணம், ஜனவரி 9ஆம் தேதி புதுக்கோட்டையில் நிறைவடைய உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சுற்றுப்பயணம் நிறைவடைய இருக்கும் சூழலில், நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 59 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் அந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற பாஜக முடிவு எடுத்திருக்கிறது. இதன் காரணமாகவே என்டிஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜக முயற்சித்து வருகிறது. இதனிடையே இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக உயர்மட்டக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாளையே தேர்தல் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டிசம்பர் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று உறுதி செய்துள்ளார்.
தேமுதிக மாநாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய நாளில் தான் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்க உள்ளார். அதே நாளில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறது. இதனால் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications