Exclusive: கொரோனா நோயாளிகளுக்கு 'கமகம' வீட்டுச் சாப்பாடு.. அதுவும் 'இலவசமா' - கதையல்ல நிஜம்!
சென்னை: உக்கிரமான இந்த கோவிட் நேரத்தில், மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது ஒரு தனியார் அமைப்பு.
கொரோனா இரண்டாம் அலை, இப்படித்தான் என்று இல்லாமல் தேசத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள், பாதிப்புகள் போன்றவை 'நிலைமை எங்கு போய் முடியுமோ' என்ற கலக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களும் அதிகரிக்க, உலக நாடுகள் தற்போது மெல்ல மெல்ல கைக்கொடுக்க துவங்கியுள்ளன. பாகிஸ்தான் கூட ஆம்புலன்ஸ் அனுப்ப தயார் என்கிறது. ஏறக்குறைய 15 நாடுகள் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிலேயே தயார் செய்து
இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு தயார் செய்து இலவசமாக அளிக்கும் சேவையை துவங்கியுள்ளது 'Monkey Temptation' எனும் ஒரு தனியார் அமைப்பு. ஆம்! வீட்டிலேயே உணவு தயார் செய்து அதனை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

தங்கு தடையின்றி
இதுகுறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் 'Monkey Temptation' அமைப்பிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், "கடந்த வருடம் கொரோனா தொற்று உலகை பாதித்த போது, இந்த அமைப்பை தொடங்கினோம். எங்கள் நோக்கம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்க வேண்டும் என்பதே.

குவியும் ஆர்டர்
மூன்று வேளையும் நாங்கள் உணவு தயார் செய்கிறோம். தேவைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரித்துக் கொள்வோம். சென்னையில் பல இடங்களில் இருந்தும் எங்களிடம் உணவு கேட்டு ஆர்டர் வரும். உணவு கேட்பவர்கள், அவர்களே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆவணத்தை எங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சான்றுகள் கேட்பதில்லை.

ஆல் ஓவர் சென்னை
Dunzo அல்லது Swiggy மூலம் கூட எங்கள் உணவை ஆர்டர் செய்ய முடியும். தவிர, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து கூட உணவை வாங்கிச் செல்வார்கள். சென்னையில் எந்த இடமாக இருந்தாலும் அவர்கள் எங்களிடம் உணவு பெற முடியும். எங்களிடம் வாங்குவோரில் பெரும்பாலானோர் சென்னையில் பணிக்காக வந்து தனியாக வசிப்பவர்களே. பெற்றோர்கள் வேறு ஊரில் இருப்பார்கள். இவர்கள் இங்கு வேலை செய்வார்கள். அவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு எங்கள் அமைப்பின் இலவச உணவு பெரும் ஆதரவாக உள்ளது.

அறக்கட்டளை வாயிலாக
கொரோனா நோயாளிகளுக்கு உணவு தேவையெனில், 9952946032 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி, monkeytemptation எனும் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாகவும் எங்களை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக எங்கள் சார்பில் ரிப்ளை கொடுக்கப்பட்டு, உணவும் அவர்களது தேவைக்கேற்ப தயார் செய்து கொடுக்கப்படும் என்றார். எல்லாம் சரி! "இத்தனை பேருக்கு இலவச சாப்பாடு என்றால், எப்படி கட்டுப்படியாகும்?" என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, 'நாங்கள் அறக்கட்டளை வாயிலாக இந்த சேவையை செய்து வருகிறோம்' என்றார் சிம்பிளாக.












Click it and Unblock the Notifications