மாதாந்திர மின் கணக்கீடு முறை.. சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சாமானிய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்பது உள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு முறை கொண்டு வரப்பட்டால், மக்களுக்கான மின்சாரக் கட்டணம் பாதியாக குறையும் என்பதால், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளதால், திமுக தரப்பில் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. இதனால் மகளிர் உரிமைத் தொகை, அரசு ஊழியர்கள் பிரச்சனை, ஆசிரியர்கள் கோரிக்கை, மகளிர் திட்டங்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமுள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு 2வது முறையாக தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக 2024-25 நிதியாண்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன் 3 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்.
இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் அதுவும் ஒன்றாகும். திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை எட்டவுள்ளது.
இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதனை ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்யப்படும் போது, மக்களுக்கான மின்சார கட்டணம் பாதியாக குறையும். இதனால் மாதாந்திர மின் கணக்கீடு முறை எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிவடைந்த பின், மாதாந்திர மின் கட்டண முறை செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, மாதாந்திர மின் கணக்கீடு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications