விடுமுறை தினம் எதிரொலி! மீன்கள் விலை கிடுகிடு! மார்க்கெட்களில் அலைமோதிய அசைவப்ரியர்கள்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் மார்கெட்களில் அசைவபிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.
குறிப்பாக சென்னையில் உள்ள காசிமேடு மற்றும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட்களுக்கு அதிகாலை முதலே அசைவப்பிரியர்கள் படையெடுத்து தங்களுக்கு வேண்டிய மீன்களை வாங்கிச் சென்றனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு செயல்படக் கூடிய மொத்த மீன் சந்தைகளில் மீன் வியாபாரம் இன்று களை கட்டியது.

காசிமேடு மார்க்கெட்
காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் ஏலம் முறையில் மீன்கள் விற்கப்படுவதால் அதிகாலை முதல் மொத்த வியாபாரிகளும் அதன் தொடர்ச்சியாக பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக 40% படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பியதால் மீன்களின் விலை வழக்கத்தை விட இன்று சற்று அதிகமாக இருந்தது. இருப்பினும் விலையை பற்றி பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மீன்கள் வாங்கியதை காணமுடிந்தது.

மீன் உணவில் நன்மை
சென்ற வாரத்தைவிட இந்த வாரம் ஒவ்வொரு வகை மீன்களின் விலையும் சராசரியாக 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் கவலையும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மீன்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும், அதில் அதிகமான நன்மைகள் இருப்பதாலும் தாங்கள் மீன்களை வாங்கிச் செல்வதாக காசிமேடு மார்க்கெட்டிற்கு வந்த அசைவப்பிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீன்கள் விலை
கடந்த வாரம் வரை வஞ்சிரம் மீன் கிலோ ஒன்று 700 ரூபாய் வரை மட்டுமே அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.900 வரை விலை உயர்ந்து விற்பனையானது. அதேபோல் இறால் ரூ.400 முதல் ரூ.700 வரையும், பாறைமீன் மற்றும் விலை மீன் 1 கிலோ ரூ.400 வரையும் சங்கரா மீன் கிலோ ஒன்று ரூ. 300 வரையும் இன்று விற்பனை செய்யப்பட்டது. ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை ஆகி வந்த நெத்திலி மீன் இன்று ரூ.300க்கு குறையாமல் விற்கப்பட்டது.

தமிழகம் முழுவதும்
பெட்ரோல், டீசல் விலை படிபடியாக உயர்ந்து வருவதால் கடலுக்குள் செல்லும் படகுகளின் எண்ணிக்கை குறைந்ததே இந்த விலை உயர்வு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் மீன்களின் விலை தொடர்ந்து உயருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications