எலெக்சன் டூட்டி பார்த்த ஒரு லட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓட்டு போடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதா?
சென்னை: தேர்தல் வேலை பார்த்த சுமார் ஒரு லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
.
தேர்தல் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்கு அளிக்க வேண்டும் என்றால், அரசு அளிக்கும் 'பார்ம் 12' விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து, மாவட்டதேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 4லட்சம் பேர் தேர்தல் வேலை பார்த்தனர். இவரக்ளில் 2.75 லட்சம் பேருக்கு மட்டுமே பார்ம் 12 விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் விண்ணப்பம் கிடைக்காத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டததை மனதில் வைத்துக்கொண்டு, தாங்கள் வாக்களிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே பார்ம் 12ஐ தமிழக அரசு தரவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.
இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, "நாங்கள் 2.75லட்சம் தபால் வாக்குகளுக்காக விண்ணப்பங்களை விநியோகித்தோம். இதுவரை 1.85 லட்சம் தபால் வாக்குகளை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். இதுதவிர தேர்தல் வேலை பார்த்த சுமார் 1.18 லட்சம் விருப்பதாரர்களுக்கும் நாங்கள் தேர்தல் வேலை பார்த்ததற்கான சான்றிதழ் கொடுத்துள்ளோம். அவர்கள் தங்கள் தொகுதிக்கு உள்பட எந்த வாக்குச்சாவடியில் வேண்டுமென்றாலும் வாக்களிக்க முடியும்" என்றார்.
இதனிடையே பல அரசு ஊழியர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அரசால் மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications