தாய்ப்பத்திரம் வாங்கறீங்களா? அசல் ஆவணம் அவசியம்.. நத்தம் நிலம் வாங்கும்போது 1 விஷயத்தை மறந்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பலருடைய பெரிய கனவு. பல வருடங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை போட்டு நிலம் வாங்கும்போது, அந்த நிலத்தில் பிறகு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்று பலரும் நினைப்பார்கள்.. அதனால் நிலம் வாங்கும் முன்பே சில முக்கிய விஷயங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

முதலில், நீங்கள் வாங்கப் போகும் நிலம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை பதிவுத்துறை வெப்சைட்டிலேயே பார்த்து தெரிந்து கொள்ளாம்.. அதே நேரத்தில், நேரில் அந்த இடத்துக்கு சென்று சுற்றுவட்டாரத்தில் நாலு பேரிடம் விசாரித்து, அந்த பகுதியில் நிலத்தின் உண்மையான விலை எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Mother Deed Natham Land Original Property Documents Land Purchase

அந்த நிலம் விவசாய நிலமா, நத்தம் பட்டாவா அல்லது புறம்போக்கு நிலமா என்பதையும் கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்து உறுதி செய்துகொள்வது நல்லது.

தாய் பத்திரம் அவசியம்

அடுத்து, அந்த நிலம் இப்போதுள்ள உரிமையாளருக்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான முக்கிய ஆவணம்தான் தாய் பத்திரம்.

முடிந்தவரை கடந்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான பழைய ஆவணங்களையும் சரிபார்ப்பது நல்லது. அதில் இருக்கும் சர்வே எண், நிலத்தின் அளவு, 4 பக்க எல்லைகள் ஆகியவை இப்போது இருக்கும் ஆவணங்களுடன் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

விற்பனையாளரிடம் நிலத்தின் ஒரிஜினல் ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துவிட்டால் நல்லது. அதேபோல அசல் ஆவணங்கள் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

வில்லங்க சான்றிதழை பார்க்க வேண்டும்

அந்த நிலத்தை இதற்கு முன்பு யார் யாரிடம் விற்றார்கள், அந்த நிலத்தின் மீது ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வில்லங்கச் சான்றிதழ் உதவும்.

இதனை பதிவுத்துறை இணையதளத்தில் எடுத்து பார்க்கலாம். அதில் இருக்கும் உரிமையாளர் பெயர்களும், தற்போது நிலத்தை விற்கும் நபரின் பெயரும் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

நிலம் தொடர்பாக வழக்கு, கடன் அல்லது வேறு சட்டப் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால், ஆவணங்களை ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரிடம் காட்டி சட்ட ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

நிலத்தை நேரில் அளப்பது முக்கியம்

ஆவணத்தில் இருக்கும் நிலத்தின் அளவும், நேரில் இருக்கும் நிலத்தின் அளவும் ஒன்றாக இருக்கிறதா என்பதை அரசு அங்கீகரித்த சர்வேயர் மூலம் அளந்து பார்ப்பது நல்லது.

அதேபோல அந்த நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் செல்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை அப்படியிருந்தால் வீடு கட்டுவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

அந்த பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குமா, அருகில் ஆறு, குளம் இருக்கிறதா, நிலத்தடி நீர் எப்படி இருக்கிறது, தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது என்பதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். வீடு கட்டப் போகிறவர்கள் மண்ணின் தன்மையையும் பரிசோதிப்பது நல்லது.

அரசு அனுமதி இருக்கிறதா?

நிலம் இருக்கும் பகுதியில் அந்த லே-அவுட்டுக்கு அரசு அனுமதி இருக்கிறதா என்பதையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். டிடிசிபி அல்லது சிஎம்டிஏ போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அனுமதி பெற்ற லே-அவுட்டாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

வாரிசுகள் மூலம் வரும் நிலமாக இருந்தால், அந்த சொத்தில் உரிமையுள்ள அனைத்து வாரிசுகளும் சம்மதித்துள்ளார்களா என்பதையும் பார்க்க வேண்டும். குறிப்பாக பெண் வாரிசுகளின் உரிமையையும் கவனிக்க வேண்டும். உயில் மூலம் சொத்து வந்திருந்தால், அந்த உயில் முறையாக பதிவு செய்யப்பட்டதா அல்லது சட்டப்படி செல்லுபடியாகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்பே கவனம்

நிலத்தை வாங்க முடிவு செய்தவுடன் உடனே பணத்தை கொடுத்துவிடக் கூடாது. முதலில் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு, அட்வான்ஸ் கொடுத்து கிரைய ஒப்பந்தம் செய்யலாம்.

அந்த அக்ரிமெண்ட்டில் மொத்த விலை, கொடுத்த அட்வான்ஸ் தொகை, மீதமுள்ள பணத்தை எப்போது கொடுக்க வேண்டும், நிலத்தை எப்போது ஒப்படைக்க வேண்டும் போன்ற விஷயங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

பத்திரப்பதிவு செய்யும்போது அரசு நிர்ணயித்த முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்தி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு முடிந்த பிறகு பட்டா மாறுதலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், நிலம் வாங்குவதற்கு முன்பு ஆவணங்களை வழக்கறிஞரிடம் காட்ட வேண்டும், நிலத்தின் அளவு மற்றும் எல்லையை சர்வேயர் மூலம் சரி பார்க்க வேண்டும.. நிலத்தின் வகையை அரசு அலுவலர்களிடம் உறுதி செய்ய வேண்டும்... இந்த மூன்று விஷயங்களிலும் கவனமாக இருந்தால், பல எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+