சென்னை சூளைமேடு கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மூத்த மகனை காப்பாற்ற பழியை ஏற்ற தாய்!
சென்னை: சென்னை சூளைமேட்டில் (Chennai Murder) மகன் செய்த கொலைக்கு தாய் பழியேற்றுக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைய மகன் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தியதால் கவலையடைந்து இருந்தார். தாய் தினமும் கஷ்டப்படுவதை கண்டு கலங்கிய மூத்த மகன் தம்பி என்றும் பாராமல் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதால், மூத்த மகனுக்காக தாய் கொலைப் பழியை ஏற்று போலீசில் சரண் அடைந்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள பெரியார் பாதையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவரது மனைவி பிரமிளா (47). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உண்டு. மூத்த மகன் வசந்தகுமார் (30), ராஜபிரபா (25) மற்றும் முகில் (19) என 3 மகன்கள் இருந்தனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் ராமச்சந்திரன் பிரமிளாவை பிரிந்து சென்று விட்டார்.

கொலை செய்ததாக சரண் அடைந்த பிரமிளா
இதனால் பிரமிளா தன் மகன்கள் 3 பேருடன் வசித்து வந்தார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். மூத்த மகன் வசந்தகுமாருக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார். இதில் அவருக்கு வரன் அமைந்தது. அடுத்த 2 மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் தான் நேற்று கால பிரமிளா வடபழனி காவல் நிலையம் சென்று தன் மகனை கொன்று விட்டதாக சரண் அடைந்தார்.
போலீசாருக்கு ஒன்று புரியவில்லை. அப்போது கூறிய பிரமிளா, நான் எனது கடைக்குட்டி மகன் முகிலை கொன்றுவிட்டேன். என்னை கைது செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். தினமும் முகில் குடித்துவிட்டு வருவதாகவும், மதுபோதையில் என்னிடம் தகராறு செய்துவிட்டு பணத்தை வாங்கி செல்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும், நேற்று முன் தினம் இரவும் என்னிடம் பணம் கேட்டு மது போதையில் தொந்தரவு செய்ததால் கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மூத்த மகனுக்கு 2 மாதத்தில் திருமணம்
இதையடுத்து அதிர்ச்சிக்குள்ளான போலீசார் பிரமிளாவை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகிலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி பிரமிளாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதேபோன்று முகிலின் கழுத்தில் அரிவாளால் ஆழமாக வெட்டப்பட்டிருந்தது.
பிரமிளாவால் இவ்வளவு வலுவாக வெட்டமுடியுமா? என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சம்பவம் நடந்ததாக கூறிய நேரத்தில் வேறு யாராவது வீட்டில் இருந்தனரா என்று கேட்டனர். அப்போது அவர் யாரும் இல்லை என பதில் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூத்த மகன் வசந்தகுமார் மற்றும் மேலும் ஒருவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றி பிரமிளாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை கூறினார். வசந்தகுமார் தான் அவரது நண்பர் கண்ணன் என்பவருடன் சேர்ந்து இளைய மகன் முகிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மூத்த மகனுக்கு அடுத்த 2 மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதால் தானே கொலை பலியை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரமிளா கூறியதாவது:-
தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பான்
கடைக்குட்டி மகன் முகில் குடிக்கு அடிமையாகிவிட்டார். தினமும் குடித்துவிட்டு வந்த தாயிடம் தகாராறு செய்வாராம். மேலும் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் தாயிடம் பணம் கேட்பதும், அவர் இல்லை என்று கூறினால் வெட்டி கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டி வந்திருக்கிறார். முகிலின் செயல்பாடுகளால் வசந்தகுமாருக்கு திருமண வரன் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இதனால் வசந்தகுமார், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது போதையில் வந்த முகில், தாயை சரமாரியாக அடித்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன கவலை அடைந்த பிரமிளா இது பற்றி மூத்த மகன் வசந்தகுமாரிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார் தன் நண்பர் கண்ணனுடன் அங்கு வந்து முகிலை தாக்கியுள்ளார்.
மூத்த மகனுக்காக பொய் சொன்னேன்
அப்போது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முகில் உயிரிழந்துள்ளார். கொலை வழக்கில் வசந்தகுமார் சிறைக்கு சென்றால் திருமணம் நடக்காது என பயந்து போய், அவர் செய்த கொலையை மறைத்து நான் பொய் சொன்னதாகவும், கொலைப் பழியை ஏற்றதாகவும் பிரமிளா கூறினார்.
இதையடுத்து வசந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தாய் பிரமிளாவையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications