தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்.. முதல்வர் விஜய் கருத்து சொல்லாதது ஏன்? பெ.சண்முகம் கேள்வி!
சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆம் இடத்திற்கு சென்றதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், இதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தருக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் எம்பி ராபர்ட் ப்ரூஸ், தவெக எம்எல்ஏ முருகன் ஆகியோர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடம் சென்றது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். அதேபோல் ஆளுநர் அர்லேகர் தொடர்ந்து அத்துமீறும் போதும் கூட முதல்வர் விஜய் தனது கருத்தை சொல்லாதது கவலைக்குரியது. முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
