தடபுடலாக தயாராகும் மட்டன் பிரியாணி.. இருக்கைகளில் ஸ்நாக்ஸ் பை.. திமுக இளைஞரணி ஸ்பெஷல் ஏற்பாடு!
சென்னை: திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் நிர்வாகிகளுக்காக சுடச்சுட மட்டன் பிரியாணி தயாராகி வருகிறது. 1.30 லட்சம் நிர்வாகிகளுக்காக இருக்கைகளில் சிற்றுண்டி அடங்கிய பைகளும் ரெடியாக வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் மலையாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் இன்று மாலை வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்று உள்ளார்.

இந்த நிகழ்வில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இதற்காக 135 ஏக்கர் அளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு பிஸ்கட், தண்ணீர், நொறுக்குத் தீனி, கடலை மிட்டாய் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய சிற்றுண்டி பை வழங்கப்படுகிறது. இளைஞரணி நிர்வாகிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகளில் இந்த சிற்றுண்டி பை ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலையை சுற்றியுள்ள 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் இன்று காலை முதல் சுடச்சுட கமகமவென மட்டன் பிரியாணி தயாராகி வருகிறது.
தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 700 ஆடுகள் கொண்டுவரப்பட்டு 40,000 நிர்வாகிகளுக்காக பிரம்மாண்டமான மட்டன் பிரியாணி சுடச்சுட தயாராகி வருகிறது. இது போல 13 இடங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்காக சுத்தமான முறையில் சுகாதாரமான முறையில் சுடச்சுட பிரியாணி செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மட்டன் பிரியாணியை சுகாதாரமான முறையில் தயார் செய்து அனைத்து பிரியாணியையும் பேக் செய்து வாகனங்களில் கொண்டு செல்லும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.
வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தரும் நிர்வாகிகளுக்கு காலை முதல் பல்வேறு மாநகரங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள பிரியாணி மாஸ்டர்களை கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு வருகிறது. மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 6000-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications