என் குடும்பத்தில் ஒருவராக பழகி பாசம் வைத்தவர் அண்ணன் மாரிமுத்து.. கலங்கிய நடிகர் விமல்
சென்னை: என் குடும்பத்தில் ஒருவராக பழகி பாசம் வைத்தவர் அண்ணன் மாரிமுத்து.. அவர் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று நடிகர் விமல் கண் கலங்க கூறியுள்ளார். மாரிமுத்துவின் சொந்த ஊர் சென்ற நடிகர் விமல் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இந்தாம்மா ஏய்.. என்று அதட்டலும் மிரட்டலுமாக சின்னத்திரை சீரியலில் பேசி அனைவரின் இல்லங்களிலும் ரசிக்க வைத்தவர் இன்று நம்மிடையே இல்லை. எதிர்நீச்சல் டிவி சீரியல் டப்பிங் பேச சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று மரணமடைந்து விட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவருடன் சீரியலில் நடித்த பலரும் தங்களின் குடும்பத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தது போலவே வந்து கதறி துடித்தனர். சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது ஏராளமான ரசிகர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்றைய தினம் அவரது இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் விமல் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவர் மாரிமுத்து இயக்கிய புலிவால் படத்தில் நடித்தவர்.
செய்தியாளர்களிடம் பேசிய விமல், 'சினிமாவை மிகவும் நேசித்தவர் மாரிமுத்து. சோர்வடையும் நேரங்களில் அவரிடம் பேசினால் புது தெம்பு கிடைக்கும், அந்த அளவுக்கு பழகுவதற்கு மிக இனிமையானவர்.மாரிமுத்து இயக்கிய புலிவால் என்ற படத்தில் நான் நடித்துள்ளேன். என் மீதும் என் குடும்பம் மீதும் மிகுந்த பாசம் வைத்தவர்.
எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் மிகவும் ஆறுதலாக பேசக்கூடிய நபர். தற்போது தான் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அவரை தெரியும். சினிமாவை பற்றி எந்த சந்தேகத்தை கேட்டாலும் அவர் சொல்லக்கூடியவர் என்று விமல் கூறினார். மாரிமுத்துவின் உடலுக்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது பசுமலைத்தேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிகுணசேகரன் என்ற மாரிமுத்து காற்றோடு கரைந்து போனார். கண்ணீர் மல்க ரசிகர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications