மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்ல கூடாது! கர்நாடகாவில் போலீஸ் உத்தரவு.. பாஜக கடும் எதிர்ப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், மைசூரில் விநாயகர் ஊர்வலம் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஊர்வல பாதையில் பட்டாசுகள் வெடிக்கவும் போலீசார் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இந்து பண்டிகைகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது என ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க இன்று திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக விநாயகரின் சிலைகள் வைக்கப்படும். அதற்கு பூஜைகள் செய்யப்பட்டு, பிறகு அவை நீரில் கரைக்கப்படும். நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்
இதற்கிடையே கர்நாடக மாநிலம் மைசூர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மைசூரின் டி.நரசிபுரா பகுதியில் விநாயகர் ஊர்வலம் தொடர்பாக போலீசார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, மசூதி வழியாக ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அந்தப் பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் காவலர் ஒருவர், அந்த பகுதி பதற்றமான பகுதி என கூறுவதுடன், ஊர்வலம் மசூதி வழியாக சென்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கிறார்.
கடும் நடவடிக்கை
அவர் மேலும், "அந்த வழியாக ஊர்வலத்தை எடுத்து செல்லக் கூடாது. விழா என்றால் கொண்டாட்டம் என்றாலும் மற்றவர்களும் மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அனைவரும் மசூதிக்கு முன்பு சென்று பட்டாசுகளை வெடிக்கிறீர்கள். இந்த முறை நான் ஊர்வலம் அந்த வழியாக வருவதை பார்த்தால் நடவடிக்கை எடுப்பேன்" என்று கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார்.
கொந்தளிக்கும் பாஜக
இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பினர் அவரது பேச்சை வரவேற்றுள்ளனர். அதேநேரம் இன்னொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜகவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாஜக எம்பி யதுவீர் வாடியார் விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது என போலீசார் கூறியிருப்பதே இந்துக்களுக்கு எதிரானது என அவர் விமர்சித்துள்ளார்.
அவர் மேலும், "கடந்த காலங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் பாரம்பரியத்தையும் கொண்டாட்டங்களையும் அவர் மதிக்கவில்லை என்ற தோற்றம் ஏற்படுகிறது. அனைத்து தெருக்களும் பொதுமக்களுக்கானவை. அனைவருக்கும் தங்கள் மதத்தை கொண்டாட முழு உரிமை உள்ளது. எங்கு ஊர்வலம் செல்ல வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. மசூதி இருக்கறது என்பதற்காக மட்டும் எங்களது கொண்டாட்டங்களை அவமதிக்கக் கூடாது. போலீசார் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அதேநேரம் எங்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
