இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்கள்.. சென்னை நீலாங்கரை பெண் கேஸில் ட்விஸ்ட்.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: இறந்து போனவர்களுக்கு வரும் தபால்கள் மற்றும் பார்சல்களை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் வகையில் சட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் தபால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. ஒரு தனிமனிதனின் உணர்வுப்பூர்வமான போராட்டமாகத் தொடங்கிய இந்த வழக்கு, தற்போது ஒட்டுமொத்த இந்திய தபால் சட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசைத் தள்ளியுள்ளது.. இந்த வழக்கின் சாராம்சம் என்ன?
சென்னை நீலாங்கரையை சேர்ந்த மோகனா ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள ஒரு மனு, இந்திய தபால் துறையின் நூற்றாண்டுகள் பழமையான சட்டத்தையே மாற்றி அமைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது..

தனது கணவர் மறைந்த பிறகும், அவரது பெயருக்குத் தொடர்ந்து வரும் தபால்களும் பார்சல்களும் தங்களுக்கு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்..
சென்னை நீலாங்கரை பெண்
மோகனா ராமசாமி தனது மனுவில், தனது கணவர் இறந்துவிட்ட போதிலும் அவரது பெயருக்கு முக்கியமான தபால்களும் பார்சல்களும் வந்தவண்ணம் உள்ளதாகவும், தபால் துறை ஊழியர்கள் அவற்றை மனைவியான தன்னிடம் ஒப்படைக்க மறுத்து மீண்டும் எடுத்துச் சென்றுவிடுவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்..
இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விரிவான விசாரணைக்கு வந்தது..
தபால்கள், பார்சல்கள்
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய தபால் விதிகளின்படி தபால்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் மட்டுமே நேரடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், உறவினர்களிடம் ஒப்படைக்க சட்டத்தில் இடமில்லை என்றும் வாதிட்டார்..
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்திய தபால் அலுவலகச் சட்டம் 1898-ன் கீழ் உள்ள சில விசித்திரமான மற்றும் குழப்பமான பிரிவுகளைச் சுட்டிக்காட்டினர்.. குறிப்பாக, சட்டப்பிரிவு 51-ன் படி, முகவரிதாரர் இறந்துவிட்டால் அந்தத் தபால் "யாரும் கோராத ஆவணமாக" (Unclaimed document) கருதப்பட்டு, அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.. ஒருவேளை அனுப்பியவர் முகவரி இல்லையென்றால், அவை தபால் அலுவலகப் பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகின்றன..
இறந்தவர்களுக்கு போஸ்டல்
இன்னும் ஒரு படி மேலே போய், தபால் சட்டப் பிரிவு 65-ன் துணை விதி 1-ன் படி, அனுப்பியவர் இல்லையென்றால் அந்தத் தபால் அழிக்கப்பட வேண்டும் என்ற விதியையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.. இத்தகைய காலாவதியான மற்றும் குழப்பமான சட்டப் பிரிவுகளால் மனுதாரரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பாதிக்கப்படுவதை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது..
ஒரு நபர் மறைந்த பிறகு அவருக்கு வரும் தகவல்கள் அல்லது பொருட்கள் அவரது வாரிசுகளுக்குச் சேர வேண்டியது இயற்கை நீதி என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.. தற்போதைய நவீனச் சூழலில், மறைந்த நபர்களின் குடும்பத்தினர் தங்களுக்குச் சேர வேண்டிய முக்கிய ஆவணங்களைப் பெறுவதில் இத்தகைய முட்டுக்கட்டைகள் இருக்கக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்..
ஹைகோர்ட் அதிரடி
எனவே, இந்த விதிகளில் உடனடியாகத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இறந்து போனவர்களுக்கு வரும் தபால்கள் மற்றும் பார்சல்களை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் வகையில் சட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் தபால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..
இந்த உத்தரவு நகலை தபால் சேவைகள் இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்து, நாடு தழுவிய அளவில் விதிகளில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.. இந்தத் தீர்ப்பானது, மறைந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக வரும் தபால்களுக்காகக் காத்திருக்கும் பல குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது..












Click it and Unblock the Notifications