சனாதனம்- வாங்குற சம்பளத்துக்கு வேலை இல்லைன்னா என்னத்தையாவது பேசுவதா?ஆளுநர் ரவி மீது சீமான் பாய்ச்சல்
சென்னை: சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சனாதன தர்மம் தொடர்பாக பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவையாறில் தியாகராஜரின் 176வது ஆராதனை நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்றார்.

திருவையாறு ஆராதனை நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீக அடையாளம் ராமர். இந்தியாவை இணைத்தது ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர்தான் இந்தியாவை ஆன்மிகம் மூலம் இணைத்தார். இந்த நாட்டை ஒன்றும் ஆட்சியர்கள் உருவாக்கவில்லை. வலிமைமிக்க ஆட்சியர்கள் இணைந்து ஒன்றும் இந்த நாட்டை உருவாக்கவில்லை. இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து துறவிகள், ரிஷிகள், முனிவர்கள் சேர்ந்துதான் உருவாக்கினர். நாம் எல்லோரும் ஒரே பாரதம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த பாரதம் சனாதன தர்மத்தால் இயங்கி வருகிறது. இந்தியா இணைந்தது சனாதன தர்மத்தால் மட்டும் சாத்தியம் ஆனது. இந்தியா பக்திமயமான நாடு. இதில் இசையும் ஒரு சக்தி மிக்க பக்தி என்பதை மறக்க கூடாது. இந்த பாரத நாடே ராமரை விரும்புகிறது. நமது நாடு புண்ணிய பூமிகளால் கோர்க்கப்பட்டது. திருவையாறு இப்போதும் கூட புண்ணிய பூமியாக விளங்குகிறது. இந்தியா ரிஷிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்று சொன்னேன். இந்தியாவை உருவாக்கிய அந்த ரிஷிகளில் ஒருவர்தான் தியாகராஜர் என பேசியிருந்தார்.
இப்படி தொடர்ந்து சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி பேசி வருவதை தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர். ஆளுநர் ரவியின் இந்த பேச்சு குறித்து தேவகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதில்: சனாதன தர்மத்தை எதிர்த்த முதலாவது வேதம் எங்களுடையதுதான். எங்களுடைய சித்தர்கள், ஞானிகள், யோகிகள் அனைவரும் சனாதன கோட்பாட்டை நிராகரித்தனர். சனாதனம், பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசுகிறது.
ஆனால் என்னுடைய மறை சொல்கிறது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பகுத்துண்டு பல் உயிர்கள் ஓம்புதல் என்கிறது மறை. சாதிய இரண்டொழிய வேறில்லை என எங்கள் அறிவு மூதாட்டி அவ்வை பாடுகிறார். பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டுஇருக்குதோ? என எங்கள் சிவவாக்கியார் பாடுகிறார். இதனை விட சனாதனத்தை எப்படி எதிர்க்க முடியும்?

சனாதனத்தை கொண்டு வந்தது நீங்கள்தான். தலையில் இருந்தும் தோளில் இருந்தும் பிறந்தவர்கள் என சொன்னது சனாதனம். சொன்னது நீங்கள். திங்குற சோத்துக்கும் வாங்குற சம்பளத்துக்கும் வேலை இல்லைன்னா என்னத்தையாவது பேசிகிட்டு இருக்க வேண்டியதா?. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications