சீமானை நம்பி நாட்களை தொலைச்சுட்டேன்.. நாம் தமிழரை விட்டு விலகிய புகழேந்தி! குமுறும் தம்பிகள்
சென்னை: சீமான் அவர்களின் வார்த்தை மட்டும் தான் அரசியல் என நம்பி தொலைத்த நாட்கள் தான் அதிகம் என்று கூறி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார் மாவட்டச் செயலாளர் புகழேந்தி.
நாம் தமிழர் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் முன்னணி உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர் புகழேந்தி மாறன். சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் நிகழ்வுகள், கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகளில் தவறாமல் இடம்பிடிக்கும் முகமாக இருந்து வந்த புகழேந்தி மாறன் தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து ஏமாற்றத்துடன் பேஸ்புக்கில் ஒரு பதிவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில், "பெரும் நம்பிக்கையோடு துவங்கிய பயணம்! அண்ணன் சீமான் அவர்களின் வார்த்தை மட்டும் தான் அரசியல் என நம்பி தொலைத்த நாட்கள் தான் அதிகம்! அனுபவங்கள் தான் வாழ்க்கை பாடமாகிறது! அது என் அரசியலுக்கு ஏற்பட்டுவிட்டது!! இதுவரை நான் வகித்து வந்த தென் சென்னை (கிழக்கு) மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் என்னை விடுவித்து கொள்கிறேன். இந்த பயணத்தில் எனக்கு துணையாக நின்று கட்சியை வளர்க்க பாடுபட்ட அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும் !!" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
புகழேந்தியின் இந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அனுதாபிகளை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. கடந்த ஆண்டு சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகிய வெற்றிக் குமரன் இது குறித்து தெரிவிக்கையில், "அண்ணன் சீமானுக்கும் கட்சிக்கும் அரனாக இருந்த உன் விலகலும், என் விலக்கலும் எதிர்கால தமிழ்த்தேசிய நலன் கருதி பொதுத்தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை... விவாதிப்போம்..." என்று குறிப்பிட்டு உள்ளார்.
தனசேகரன் சுப்ரமணியன் என்பவர் வெளியிட்டு உள்ள கருத்தில், "நாமே மாற்று என வழி தருகிறேன் என்று கூறி வெறுமனே வலிகளை மட்டும் தந்த, தந்து கொண்டிருக்கிற, தான்மையின் சிகரம், அறியாமையின் இருப்பிடம், வந்த நிலை மறந்த மடமையின் உச்சத்திடம் இருந்து, நிரந்தரமாக விலகி நிற்க நிறைவோடு முடிவெடுத்த தம்பி புகழ் மாறன் இவரோடு இத்தனை நெடுங்காலம் பயணித்து சுமந்த சுமைகளோ ஏராளம் என்றாலும், ஏமாற்றத்தை தருவார் என ஒரு போதும் நினைக்காமல் உடன் மெய்யான காப்பாளானாக நின்ற அந்த நெடுந்தொலைவு என்பது, இனி வேறு எவருக்கும் வரக்கூடாது என்று மட்டுமே இப்போது சொல்ல தூண்டுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
சிவர் என்பவர், "அண்ணா தவறான முடிவு எடுக்காத. நாம் எதிர்த்து சண்ட போடுவோம். கஷ்ட பட்ட நேரத்துல கட்சிக்கு உறுதுணையாக இருந்துட்டு வளரும் நேரத்துல விட்டுட்டு போறியே அண்ணா." என்று குறிப்பிட்டு உள்ளார். கணேசன் என்பவரும், "தம்பி அவசரபடாதீங்க, பொறுமை காக்கவும். என் மீது மூன்று வழக்குகள், அண்ணன் சீமான் அவா்களும், அவரது தம்பியும், கைவிட்டாா்கள்." என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications