”ஆற்றுப்படுத்த சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன்” கபிலன் மகள் மறைவுக்கு சீமான் இரங்கல்!
சென்னை: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன் தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி இருக்கிறார். 2001ல் விக்ரம் நடிப்பில் வெளியான, 'தில்' படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கபிலன்.
அவரது எழுத்தில் உருவாகிய ஏராளமான பாடல்கள் சூப்பர்ஹிட்டாகி உள்ளன. கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார்.

கபிலன் மகள் தற்கொலை
இவருக்கு தூரிகை என்ற மகள் இருந்தார். எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட தூரிகை, 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். அதேபோல் ஆடை வடிவமைப்பாளராக பல படங்களுக்கும், பிரபலங்களுக்கும் பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்லாமல் பீயிங் வுமன் என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சீமான் இரங்கல்
இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்திருந்த தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு
இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன்.

காரணம் என்ன?
கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு சினிமா பிரபலங்களும், நண்பர்கள் தூரிகை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தூரிகை தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications