"அருந்ததியர் சர்ச்சை" நாம் தமிழர் அலுவலகம் மீது தாக்குதல்.. போரூரில் நாதக - ஆதி தமிழர் பேரவை மோதல்!
நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி தமிழர் பேரவை தரப்பு, போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் - ஆதி தமிழர் பேரவை ஆகிய இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டன. அதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர்கள் பற்றிய சீமானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தும், தான் வரலாற்றை மட்டுமே பேசியதாக சீமான் பதில் அளித்து வருகிறார்.

சீமான் பேசியது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் முதலியார்களை பற்றி உயர்வாக பேசிய சீமான், அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மை பணி செய்வதற்காக விஜயநகர பேரரசால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்று தெரிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரச்சாரத்தில் எதிர்ப்பு
சீமானின் பேச்சுக்கு அருந்ததியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் வலுத்தன. ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய சென்ற இடமெல்லாம் அருந்ததியர்கள் அவர்களுக்கு எதிராக நின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் மோதலும் வெடித்தது.

ஆதி தமிழர் பேரவை முற்றுகை
அதுமட்டுமல்லாமல் ஆதி தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட அருந்ததியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அவரது உருவப் பொம்மையை எரித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதி தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் - ஆதி தமிழர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

போர்க்களமான போரூர்
இதனிடையே நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினருக்கும் பதிலுக்கு ஆதி தமிழர் பேரவையினர் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.

தள்ளுமுள்ளு
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசார் - ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்து காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு நேரமாக பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications