சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலைக்கு போன பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்.. கொடூர பீர் கடை ஓனர்
சென்னை: வெளிநாட்டில் வேலை, லட்சங்களில் சம்பளம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் அப்பாவி மக்களின் வரிசையில், இப்போது நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவரும் இணைந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் காமர்ஸ் படித்த பட்டதாரி ஆவார்.. வேலைவாய்ப்பு ஏஜெண்ட்டுகளை நம்பி அந்த பெண் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.. இதுகுறித்த செய்தி
நாக்பூரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 28 வயதாகிறது.. வணிகவியலில் பட்டம் பெற்று வேலை தேடி வந்துள்ளார். 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இன்ஸ்டாகிராமில் "We Migrate" என்ற கணக்கின் விளம்பரத்தில் புனேவின் விமன் நகர் பகுதியில் செயல்படும் ஏஜெண்ட் அட்ரஸ் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் வேலை
உடனே 2026 பிப்ரவரி மாதத்தில் புனே சென்ற அந்த பெண்ணை, முகமையின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. போர்த்துகல், நெதர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி சாக்லேட் உற்பத்தி நிறுவனங்களில் கேஷியர், அக்கவுண்ட்டண்ட் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தனர்.
மாதம் ₹1.5 லட்சம் சம்பளம், தினந்தோறும் 8 மணி நேரம் டியூட்டி, வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை மற்றும் 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் பணி அனுமதி பத்திரம் (Work Permit) வழங்கப்படும் என்றும், பணிக்கு சேர்ந்த 3 மாதங்களில் கணவரையும் Dependent Visa அதாவது சார்ந்திருப்பவர் விசா மூலம் அழைத்து வரலாம் என்றும் உறுதியளித்துள்ளனர்.. தங்களிடம் ஏற்கனவே விசா பெற்றதாக கூறி சில கஸ்டமர்களின் வீடியோக்களையும் காண்பித்துள்ளனர். இதனால் அந்த ஏஜெண்ட்கள் மீது பெண்ணுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளது.
விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்
பிறகு, கட்டணங்கள் மற்றும் விசா நடைமுறைகளுக்காக, தன்னுடைய கணவர், மாமனாரின் வைப்புத் தொகைகளை முன்கூட்டியே திரும்ப பெற்று, பல தவணைகளாக மொத்தம் ₹11 லட்சத்தை அந்த ஏஜெண்ட்டுகளுக்கு தந்துள்ளார்.. ஏஜெண்டுகளும், கடந்த மார்ச் மாதத்தில் சில ஆவணங்களில் பெண்ணிடம் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர்.. ஆனால் அதற்கான நகல்கள் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை.
மே 21, 2026 அன்று மும்பையிலிருந்து புறப்பட்ட அப்பெண், அபுதாபி வழியாக ஸ்பெயினின் மக்ரிட் நகரைச் சென்றடைந்தார். அங்கிருந்து "வம்சி" என்பவரால் சாலை மார்க்கமாக போர்த்துகலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போர்த்துகலை அடைந்ததும் "சைதன்யா" என்பவர் அப்பெண்ணை "ஹிம்மத் சிங்" என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.. ஆனால், அந்த வீட்டிலேயே அப்பெண் அடைத்து வைக்கப்பட்டார்.
பிடுங்கப்பட்ட பாஸ்போர்ட்
பெண்ணின் பாஸ்பார்ட்டையும் பிடுங்கி கொண்டு, அதனை திரும்ப ஒப்படைக்க வேண்டுமுனால் கூடுதல் தொகையைக் கோரி மிரட்டியுள்ளனர். சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் வேலை என்று சொல்லி அழைத்து வரப்பட்ட அப்பெண், ஒரு பீர் கடையில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தூய்மை பணியாளராகக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல, அந்த பெண் தங்கியிருந்த இடத்தில் ராஜஸ்தான் மற்றும் அரியானாவைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் இதேபோன்று ஏமாற்றப்பட்டு தங்கியிருந்தது தெரியவந்தது. இந்தியாவில் உள்ள முகமையின் நிர்வாகிகள் அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு, ஆவணங்கள் தயாராகும் வரை பீர் கடை உரிமையாளரின் விருப்பத்திற்கு இணங்கி நடக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
பஸ் ஸ்டாண்டு, லாட்ஜ்களில்..
இதற்கு பெண் மறுப்பு தெரிவித்தபோது, தான் இந்தியாவில் உள்ள முகமைக்கு உரிய தொகையை வழங்கி அந்த பெண்ணை விலைக்கு வாங்கியிருப்பதாகப் பீர் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அப்போதுதான் தான் தன்னை கடத்தி விற்றுள்ளார்கள் என்பதே அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
மே 22 முதல் ஜூன் 30 வரை அங்கிருந்த அப்பெண், சாமர்த்தியமாக செயல்பட்டு தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு ஜூன் 29 அன்று அங்கிருந்து தப்பித்து, பேருந்து மூலம் லிஸ்பன் நகரை அடைந்து, அங்கிருந்து மக்ரிட் சென்றுள்ளார். பாஸ்போட், பணம் எதுவுமே இல்லாமல் பஸ் ஸ்டாண்டிலும், லாட்ஜ்களிலும் சில நாட்கள் தங்கியிருந்த அப்பெண், தோஹா வழியாக டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.
8 பேர் மீதும் வழக்கு
இந்தியாவிற்கு திரும்பிய பிறகும், அந்த ஏஜெண்ட்டுகள் பெண்ணிற்கு மெயில் அனுப்பி மால்டாவில் வேறு வேலை வாங்கித் தருவதாக சொல்லி, மேலும் ₹3 லட்சம் கேட்டுள்ளது.. அப்படி தராவிட்டால் பெண்ணின் கணவரை சும்மா விடமாட்டோம்,போலி வழக்கில் வழக்கு போடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
கடைசியில், பாதிக்கப்பட்ட பெண் புனே குற்றப்பிரிவு மற்றும் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் புனேவைச் சேர்ந்த பிரதிமா பாட்டியா, அமித் குமார் ஜா, அசார் ஷேக், கபில் மிஸ்ரா மற்றும் போர்த்துகலில் உள்ள வம்சி, சைதன்யா, ஹிம்மத் சிங் மற்றும் பீர் கடை ஓனர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர்கள் அனைவரிடமும் புனே குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
