சட்டசபை மரபை மீறி கோட்சே, வெள்ள நிவாரணம் பற்றி சபாநாயகர் பேசிவிட்டார்.. பாஜக எம்எல்ஏ நயினார் ஆவேசம்
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அவையின் மரபுகளை மீறி சாவர்க்கர் , கோட்சே குறித்து பேசியதால்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டுப்பண் இசைப்பதற்கு முன்பே வெளியேறிவிட்டார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது ஆளுநர் தனது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறி தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை முழுவதுமாக படிக்காமல் அமர்ந்தார்.

கடந்த முறை தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறிய நிலையில் இன்றைய தினம் தேசிய கீதம் இசைக்கப்படும் வரை அவையில் இருக்க காத்திருந்தார். ஆனால் சபாநாயகர் பேசி முடித்ததும் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும் சட்டசபை பாஜக எம்எல்ஏக்களின் தலைவருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அவையில் ஆளுநர் உரையை வாசிக்க வந்தார். அப்போது நாட்டுப் பண் இசைக்க வேண்டும் என சொல்லிவிட்டு இதை நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன் என சொல்லிவிட்டு ஆளுநர் அமர்ந்துவிட்டார்.
அதன் பிறகு ஆளுநர் உரை சபாநாயகர் அப்பாவுவால் முறைபடி வாசிக்கப்பட்டது. இது சட்டசபை பதிவேட்டிலும் பதிவாகிவிட்டது. எல்லாமே முறையாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சபாநாயகர் இறுதியாக பேசும் போது பெருமளவில் எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது அந்த நிதியை நீங்கள் வாங்கித் தர வேண்டும்.
ஆளுநரை நாங்கள் முறைப்படிதான் நடத்துகிறோம் என சொல்லிவிட்டு சாவர்க்கர், கோட்சே என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சட்டசபை மரபில் இல்லாத ஒன்றை இன்று சபாநாயகர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு பாஜக எம்எல்ஏக்களாகிய நாங்களும் வெளிநடப்பு செய்திருக்க முடியும்.
முறைப்படி நடக்கும் சட்டசபை கூட்டம் என்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்யாமல் அவர்கள் கோட்சே, சாவர்க்கர் பெயரை குறிப்பிட்டு பேசியதை பாஜக வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரை தமிழக அரசு மரபுபடி நடத்தவில்லை என்பதை மக்களுக்கு செய்தியாளர்கள்தான் தெரிவிக்க வேண்டும். தமிழக ஆளுநர் மரபுபடித்தான் நடந்து கொண்டார்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் போனதால் ஆளுநர் வெளியேறி விட்டார். நாட்டுப்பண் இசைக்கப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் பேசி மரபை மீறிவிட்டார். மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கித் தாருங்கள் என்றெல்லாம் ஆளுநரிடம் யாருமே பேச மாட்டார்கள். பிறகு சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் சபாநாயகர் பேசும் போது ஆளுநர் எப்படி கேட்டுக் கொண்டிருப்பார்?
ஆளுநர் பேசியதும் பதிவில் இருக்க வேண்டும். சபாநாயகர் நீக்குவதாக சொல்வது தவறு. பொதுவாக ஒரு அரசாங்கமானது அவர்களுடைய கொள்கைகளையும் அரசு திட்டங்களையும் கொடுத்து வாசிக்க சொல்ல வேண்டும். ஆனால் அதற்காக எல்லாவற்றையும் எழுதி கொடுத்தால் எப்படி வாசிப்பார்.
அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என முன் கூட்டியே ஆளுநர், அரசுக்கு தெரிவித்திருப்பார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேறாததாலும் சபாநாயகர் கோட்சே பெயரை பயன்படுத்தியதாலும் அவையின் மரபை மீறி நிதி வேண்டும் என சொன்னதாலும் ஆளுநர் வெளியேறிவிட்டார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு பிறகு தேசிய கீதம் பாடுவதுதான் மரபு. அதை மாற்ற யாரும் சொல்லவில்லை. எல்லாமே மரபுபடி நடக்கும் போது சபாநாயகர் அப்படி பேசியதுதான் தவறு.
சபாநாயகர் படித்த ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுவதுமாக கேட்டுவிட்டார். இதன் பிறகு சபாநாயகர் பேசியதை தனது உதவியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் ஆளுநர் வெளியேறினார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications