அதிமுகவிடம் 56 தொகுதிகள் + 3 அமைச்சர் பதவி கேட்கிறோமா? நயினார் நாகேந்திரன் சொல்லும் பதிலை பாருங்க!
சென்னை: அதிமுகவிடம் 56 தொகுதிகளையும் 3 அமைச்சர் பதவிகளையும் நாங்கள் கேட்கிறோம் என்ற தகவல் பொய்யானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்த நிலையில், பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியளிக்கப்பட்டதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, கடந்த 8ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பழனிசாமி சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, பாஜகவுக்கு 56 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, அத்துடன் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்க்கவும் அமித் ஷா வலியுறுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்பின், நயினார் நாகேந்திரன் பழனிசாமியை மீண்டும் சந்தித்து 56 தொகுதிகள் பட்டியலை அளித்தார் என தகவல்கள் வெளியாகின. பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பு, கூட்டணி இறுதிக்குப் பின் தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
வரும் ஜனவரி 23ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழை பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார். ஜனவரி 20ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இறுதி செய்து, பிரதமர் மோடியுடன் மேடையை அனைத்து கட்சித் தலைவர்களும் பகிர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, 'திமுக இல்லாத தமிழகம்: நயினார் கனவு' என்ற தலைப்பில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் ஒரு காரசாரமான பதிவை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலினின் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தை விமர்சித்து, அவர் பதிவிட்டதாவது:
"நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்லத் தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம். சீரான சட்டம் - ஒழுங்கு, கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம், திமுக-வின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம், அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம் அமைய வேண்டும்."
"ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம், தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம், அரசின் அநீதிகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம் வேண்டும்."
"விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம், கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத, இந்துமத வெறுப்பில்லாத தமிழகம் வேண்டும்."
"மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே தமிழக மக்களின் கனவு. இக்கனவு வெகு விரைவில் நிறைவேறும்," என்று நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் உறுதியாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவிடம் 56 தொகுதிகள், 3 அமைச்சர்களை கேட்கிறோம் என்ற தகவலில் துளியும் உண்மை இல்லை.
பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பதை அமித்ஷாவும் எடப்பாடியும் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications