Manchester நகர பெண்களை சூறையாடும் Monster-கள்.. திமுகவுக்கு குட்டுவைத்த நயினார் நாகேந்திரன்
சென்னை: கோவை ஏர்போர்ட் பின்புறம் கல்லூரி மாணவி 3 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஓய்வதற்குள் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் காரில் கடத்திச் செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுகவின் சாதனை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வெளியூரைச் சேர்ந்த 20 வயதான அவர், கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒண்டிப்புதூரில் உள்ள 25 வயது இளைஞர் அவரின் ஆண் நண்பராக உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் அருகில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினார்கள். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரின் ஆண் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 இளைஞர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, கோவை மாவட்டம், இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச் சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்தவர்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வெள்ளை நிற காரில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அங்கிருந்து கிளம்பியதுபோல காட்சிகள் பதிவாகியுள்ளன. பெண்ணின் அலறல் சப்தமும் அதில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வரே.
வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலயம் அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு! என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications