தவெக அமைச்சரவை கூட்டத்தில் இவங்க 2 பேருக்கு என்ன வேலை? ஆளுநரிடம் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரல்லாத ஜான் ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும் பங்கேற்றதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் அர்லேகரிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.
குதிரை பேரத்தில் தவெக அரசு நடந்து வருவதாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் அடங்கிய கோப்புகளுடன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் கொடுத்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், யோகா தினத்தின் போது குழந்தைகளுடன் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும்... நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில், கேபினெட் அமைச்சர்கள் இல்லாமல் இரண்டு தனி நபர்கள் - ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இந்த ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 54 நாட்களில் 151 பலாத்கார சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 85-க்கு மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த கால அரசிற்கும், திமுக அரசிற்கும், இந்த அரசிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உடனே சரி செய்ய வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. ஆட்சிக்கு வந்து 54 நாட்களாகிவிட்டது. ஆனால் தவெகவினர் பல தவறுகளை செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். எல்லாவற்றிற்கும் வெள்ளை அறிக்கை கொடுக்கும் தவெக அரசு, இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?
குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பே அமமுகவில் சார்பில் போட்டியிட்டு வென்ற காமராஜை தவெகவினர் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சர் நிர்மல்குமார் சட்டம் படிச்சிருக்காரே தவிர, சட்டத்தை பற்றி தெரியுமா என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே அவர் திருப்பரங்குன்றத்திற்கு வந்து, நீதிபதி உத்தரவை நாங்க நிறைவேற்ற மாட்டோம் என சொல்லியிருக்கிறார்.
ஒரு நீதிமன்ற நீதிபதி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்னு சொன்ன பிறகும், அதை முடியாதுன்னு சொன்னா இவரு சட்டத்துறை அமைச்சராக எப்படி நீடிக்கிறார் என்றதுதான் தெரியவில்லை.
எனக்கு தெரிந்தவரையிலும் இந்திய அரசியல் சாசனம் 167-ன் படி ஆளுநர் மத்திய அரசினுடைய திட்டங்களை ஆய்வு செய்யவும், அவர் எங்கெல்லாம் போகிறாரோ அந்த இடங்களில் அரசுடைய ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதையெல்லாம் அரசியல் ஆக்கக்கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனத்தில், மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தவெக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்களைக் குறித்து புகார் அளித்தோம்.
குறிப்பாக, கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கோரி மேதகு ஆளுநரிடம் மனு வழங்கினோம்.
மேலும், கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதனைக் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி தனி மனுவொன்றையும் ஆளுநர் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.
மாநில நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை நிலைநிறுத்தும் வகையில், இந்த இரண்டு மனுக்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது நியாயமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications