தையூர் இளைஞர் கொலை.. கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: சென்னையை அடுத்த தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தவெக நிர்வாகி கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் கூலிப் படைத் தலைவர்களாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த தையூர் பிரவீன்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். காதலியின் தந்தை கூலிப்படையை ஏவி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. கொலை செய்த நபர் தவெகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூலிப்படை தலைவர்களாக..
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டிருந்த பதிவில் கூறியுள்ளதாவது: கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள். கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
விஜய் உணர வேண்டும்..
ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது. ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தனது கட்சிக்குள் 'நிர்வாகிகள்' என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
