கள் இறக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நீதிபதி ஆணைய அறிக்கை.. நயினார் நாகேந்திரன் வரவேற்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கள் இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக, மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 161 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையில், இயற்கை மதுபானமான கள் இறக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், "'கள்' இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறேன்! மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.
மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.
எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், தவெக அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
