பாஜக கூட்டணிக்கு வாங்க.. ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அழைப்பு.. நேரடியாக சொன்ன நயினார் நாகேந்திரன்!
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் சந்தித்து கொண்டது நல்ல விஷயம்தான் என்று கூறிய அவர், தேவைப்பட்டால் நானும் சென்று சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். அதன்பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையும் விமர்சித்தனர். நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாக வழிநடத்த தெரியவில்லை என்று டிடிவி தினகரன் நேரடியாக குற்றம்சாட்டினார்.

இதன்பின் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். ஆனால் அண்ணாமலையின் வேண்டுகோளை டிடிவி தினகரன் ஏற்கவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் சுமார் 5 நிமிடங்கள் சந்தித்த இருவரும், அரசியல் ரீதியாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்ல விஷயம் தான்.. சந்திக்கும் போது நல்ல முடிவுகள் வந்து சேரும்.. நான் எல்லோரையும் வரவேற்க காத்திருக்கிறேன்.
தேவைப்பட்டால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்திருக்கும் நிலையில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருப்பது பலரின் கவனத்தை திருப்பி இருக்கிறது. அக்டோபர் 12ஆம் தேதி நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின், மதுரையில் இருந்து நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இந்த விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயண விழாவிற்காக அழைப்பு விடுக்கும் வகையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications