தவெக சார்பாக போட்டியிடும் 10 வேட்பாளர்கள்.. விஜய்யால் தொடர்ந்து சொல்ல முடியுமா? சவால்விட்ட நயினார்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யால் தொடர்ந்து 10 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை சொல்ல முடியுமா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்துள்ளார். தவெகவிடம் கட்சிக்கான கட்டமைப்பே இல்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், தவெக வேட்பாளர்கள் விலை போகாமல் இருப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்பாக அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை பாஜகவினர் முற்றிலும் பொய் என்று மறுத்தனர்.

இம்முறை அதிமுக கூட்டணியில் 35 முதல் 40 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. அதேபோல் பாஜகவினர் தொடர்ச்சியாக விஜய் தங்களின் கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசி வருகின்றனர். தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் விஜய் தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது என்று பகிரங்கமாகவே கூறுகின்றனர்.
ஆனால் விஜய், தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெகவுக்கு இடையில் மட்டும்தான் போட்டி என்று பேசி வருகிறார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடந்தது மட்டுமே உண்மை. மற்றபடி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
தேர்தலை எப்படி சந்திக்கலாம்? கூட்டணி அமைப்பது? இதற்குமுன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்தன? என்பது போன்ற விவாதங்கள் மட்டுமே நடந்தது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் கூட்டணியை வெளியில் இருந்து எதிர்க்கின்றனர். ஓபிஎஸ் அவரின் கருத்தை பேசி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது.
அதனால் அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதேபோல் தம்பி விஜய் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அந்த வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். தவெகவிடம் அப்படியான கட்டமைப்பே இல்லை.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கிறது. 10 வேட்பாளர்களை விஜய்யால் சொல்ல முடியுமா? நான் தவெகவை குறை சொல்லவில்லை. அவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு இருக்கலாம். அதனை மறுக்கவில்லை. பாஜகவையும், தவெகவையும் ஒப்பிட தேவையில்லை. நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம். நடிகராக இருக்கும் விஜய்யின் கட்சி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications