தாம்பரம் காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா நியமனம்.. யார் இவர்?
சென்னை: தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னையில் ஏடிஜிபியாக (ஆபரேஷன்ஸ் பிரிவு) செயல்பட்டு வந்த நிலையில் இன்று தமிழக அரசு தாம்பரம் காவல் ஆணையராக நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* சென்னையில் ஏடிஜிபியாக (ஆபரேஷன் பிரிவு) பணியாற்றி வரும் நஜ்முல் ஹோடா தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நஜ்முல் ஹோடா தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் வகித்து வந்த ஏடிஜிபி ( ஆபரேஷன்) கூடுதல் பொறுப்பாக ஆயுதப்படைபிரிவின் ஏடிஜிபியாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர் ஆர் தினகரனிடம் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு இருக்கிறது.
தாம்பரம் காவல் ஆணையர் பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்தது. தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். அதன்பிறகு புதிதாக தாம்பரத்துக்கு காவல் ஆணையர் நியமனம் செய்யப்படவில்லை. தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் தற்போது நஜ்முல் ஹோடா அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நஜ்முல் ஹோடா தமிழகத்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக உள்ளார். இவர் 2001ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்தபோது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். . 500-க்கும் மேற்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். ஆவடி கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றிய நிலையில் தற்போது சென்னையில் ஆபரேஷன் பிரிவின் ஏடிஜிபியாக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையருக்கு உட்பட்ட பகுதி சென்னையின் புறநகர் பகுதியாகும். இங்கு குற்ற சம்பவத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாம்பரத்துக்கு என்று தனி காவல் ஆணையர் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக தாம்பரம் காவல் ஆணையர் இல்லாமல் இருந்தது. இது சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதால் தற்போது நஜ்முல் ஹோடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
