அருள் விக்னேஷ் இழிவானவன்.. அதற்காக தவெகவை விட்டு நீக்க முடியாது.. முட்டுக்கொடுத்த நாஞ்சில் சம்பத்!
சென்னை: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இழிவானவன் என்று அக்கட்சியின் பிரச்சார செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தவெகவில் இருந்து கொண்டு இப்படி தரங்கெட்ட வகையில் நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், அதற்காக அருள் விக்னேஷ்-ஐ கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் முட்டுக் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அம்மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் பத்மஜா இதுவரை மவுனமாகவே இருக்கிறார். ஆனால் தவெக தரப்பில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் வதந்தி என்று கூறி வருகின்றனர்.

இதனிடையே பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் இப்ராஹிம் தரப்பில் தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கும் அந்த புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்-ஐ முதல்வர் விஜய் அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தவெக பிரச்சார செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இழிவானவன்.. மலிவானவன், மட்டமானவன்.. தவெகவில் இருந்து கொண்டு இப்படியொரு தரங்கெட்ட முறையில் நடந்து கொண்டதை ஏற்க முடியாது. அந்த எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது தெரியாது.
மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் ஆபாசமாக நடந்து கொண்டது ஏற்கத்தக்கதல்ல. அதனால் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை காண தமிழ்நாடு ஆவலாக உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். அதற்காக அவரை கட்சியை விட்டு நீக்க முடியாது. படாதபாடு பட்டு தான் அரசை விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். அதில் ஒரு எம்எல்ஏ-வை இழப்பதை நினைத்து பார்க்க முடியாது.
எண்ணிக்கை இல்லை என்பதால், நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்பது அல்ல.. விஜய்யிடம் இரும்புக் கரம் மட்டுமல்ல.. கரும்புக் கரமும் உள்ளது. அந்த கரத்தை தவறாக பயன்படுத்தி கொண்டார்கள். அதன் காரணமாகவே எம்எல்ஏ கூட்டத்தில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் பேசாத முதல்வரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
