ராகுல்ஜி! இளமையா இருக்கிறது எப்படின்றதை விட "இந்த" புத்தகத்தை வாங்கி படியுங்கள்.. நாராயணன் திருப்பதி
சென்னை: முதிர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்த புத்தகத்தை ராகுல் காந்தி படிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி வெளியிட்டார். அவர் விழாவில் பேசுகையில், நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து, நாளை மறுதினம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் என்று சொன்னார்கள். எனக்குத் தெரியும் என்று நான் சொல்லிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா? ன்று கேட்டேன்.
தெரியாது என்று என்னுடைய தாயார் சொன்னார். 69 வயது என்று நான் சொன்னவுடன், சாத்தியமே இல்லை என்று என்னுடைய தாயார் சொன்னார். நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன், அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்றேன். 50 அல்லது 60 வயதிற்குள்தான் இருக்கும் என்று என்னிடம் அவர் சொன்னார்.

கூகுளிடம் ஸ்டாலின் வயதை தேடிய சோனியா
நான் அப்படி சொன்னவுடன் என்னுடைய தாயார் அவர்கள், கூகுளிடம் அந்த செய்தியை ஒப்பிட்டுப் பார்த்து, ஆம், நீ சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டார்.
நான் சொல்லப் போகின்ற செய்தி இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா? இல்லையா? எனக்குத் தெரியாது.

ஸ்டாலின் புத்தகம்
ஆனால், அவர் இன்னொரு புத்தகத்தை எழுதவேண்டும். அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைப்பற்றி. நான், ஸ்டாலினுக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இளமை
இளமையாக இருப்பது எப்படி என்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என ராகுல் காந்தி பேசியது பாஜகவினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறிவிட்டது. இதுகுறித்து பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, முதிர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து புத்தகத்தை ராகுல் காந்தி படிக்க வேண்டும் என ட்விட்டரில் கூறியுள்ளார்.

பப்பு பப்பு
ராகுல் காந்தியை பப்பு பப்பு என பாஜகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். அவர் முதிர்ச்சி அடையவில்லை, அவருக்கு அரசியல் தெரியவில்லை. ஏதோ குழந்தை போல் பேசி வருகிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால் ராகுல் காந்தியோ நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சுகளால் பாஜகவினரை கலங்கடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications