வரிந்து கட்டி வரும் காங்கிரஸ்..வார்த்தையை விட்ட முக்கிய ‘தலைகள்’..அண்ணாமலைக்கு ஆதரவாக வந்த ‘சீனியர்’
சென்னை: காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், செல்வப்பெருந்தகையின் மறுபக்கத்தை மக்களுக்குக் காட்டி, அவரது முகமூடியை கிழித்தெறிந்த அண்ணாமலை அவர்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். போலி அரசியல்வாதிகளை அப்புறப்படுத்தும் அண்ணாமலையின் தூய்மைப்பணி தொடரும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அண்ணாமலை -திமுக, அண்ணாமலை -அதிமுக என்றிருந்த அரசியல் களம் தற்போது அண்ணாமலை வெர்சஸ் செல்வப்பெருந்தகை என மாறி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலை மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அண்ணாமலை அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டி வருவதாக கூறியதோடு, பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியல் மற்றும் அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்களை வெளியிட்டார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை என் வழக்கின் வரலாறு அரைகுறை அண்ணாமலைக்கு தெரியுமா என வீடியோவை வெளியிட்டார். இவ்வாறாக அண்ணாமலை - செல்வப் பெருந்தகை இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருவது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. மேலும், காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி வேலுச்சாமி, எம்பி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலி அரசியல்வாதிகளை அப்புறப்படுத்தும் அண்ணாமலையின் தூய்மைப்பணி தொடரும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” காங்கிரஸ் கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் யாரும் அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய முன் வராத நிலையில், திருச்சி வேலுச்சாமி போன்ற தரக்குறைவான, அநாகரீக, குணக் கேடர்களை அழைத்து வந்து தரக்குறைவாக பேச வைத்து காமராஜர், சத்தியமூர்த்தி, மூப்பனார் போன்றவர்கள் இருந்த சத்தியமூர்த்தி பவனின் கண்ணியத்தை, மாண்பை, மரியாதையை குலைத்து விட்டார் குண்டர் சட்டத்தில் சிறை சென்ற செல்வப்பெருந்தகை.
அன்று எந்த கட்சியின் அலுவலகத்தில் குண்டர்களுடன் புகுந்து அராஜகம் செய்தாரோ, அதே கட்சிக்கு தலைவராக வந்தது தான் காலத்தின் கோலம். தமிழக காங்கிரஸ் கட்சியின் சாபம். காங்கிரஸ் கட்சி தலைவரின் மரணத்தை நியாயப்படுத்தி பேசிய அதே நபர், தற்போது அந்த கட்சிக்கே தலைவராக வலம் வருவது கண்டு உண்மையான (ஒரு சிலர்) காங்கிரஸ் கட்சியினர் மனம் வெதும்பி, நொந்து போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனிப்பட்ட முறையில் அண்ணாமலை அவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்க கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அறை கூவல் விட்டிருக்கிறார் குண்டர் சட்டத்தில் கைதான சரித்திர பின்னணி கொண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. அந்த அறைகூவலை உண்மையான காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்த நிலையில் தான், இது நாள் வரை ஓரங்கட்டப்பட்டிருந்த திருச்சி வேலுச்சாமி என்கிற நபரை வாடகைக்கு பிடித்து வந்து அண்ணாமலையின் மீதான வன்மத்தை உமிழச் செய்திருக்கிறார். நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வேலுச்சாமி கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று பிதற்றியிருக்கிறார்.
காங்கிரசை ஜாதிக் கட்சியாக்கி மொத்தமாய் முடித்து விட செல்வப்பெருந்தகை, திருச்சி வேலுச்சாமி போன்ற நபர்கள் துடிதுடித்து கொண்டிருப்பதை பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சில உண்மையான காங்கிரஸ் தலைவர்கள், செல்வப் பெருந் தகையின் மறுபக்கத்தை மக்களுக்குக் காட்டி, முகமூடியை கிழித்தெறிந்த அண்ணாமலை அவர்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். போலி அரசியல்வாதிகளை அப்புறப்படுத்தும் அண்ணாமலையின் தூய்மைப்பணி தொடரும்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications