லீ மெரிடியனை கையகப்படுத்தும் திட்டம்.. எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு தடை போட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
சென்னை : லீ மெரிடியன் ஹோட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் பெரியசாமி பழனி கவுண்டருக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தாத நிலையில், கால அவகாசம் வழங்கியும் செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்நிறுவனம் கடன் சுமையிலும் சிக்கியது.

திவால் நடவடிக்கை
இதுதொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல் நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையக்கப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.

தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு
இதனை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி பழனி கவுண்டர் தரப்பினர் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில்,1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் 423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நியாயமில்லை என வாதம்
மேலும் கடன் வழங்கியவர்களுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும், 450 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பெரியசாமி கோரியுள்ளார். மேலும் இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான நிறுவனம் தரப்பு தாங்கள் ஏற்கனவே தெரிவித்தபடி 1600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெறும் 423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என வாதிட்டது.

கையகப்படுத்தும் திட்டம் ரத்து
இதையடுத்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன தரப்பு வாதத்தை ஏற்ற தேசிய நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம் லீ மெரிடியன் ஹோட்டல் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்தது. இதன் மூலம் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் மருத்துவமனையாக மாற்றும் திட்டமும் பின்னடைவை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications