தவறு மேல் தவறு செய்த நயன்தாரா! தனுஷுக்குதான் உரிமை! Copyright Act பற்றி தெரியுமா?
சென்னை: பொதுவெளியில் ஒரு காட்சியை பலரும் பயன்படுத்துகிறார்கள் என்பதால், அதற்கான அனுமதியைப் பெறாமல் நயன்தாரா எப்படிப் பயன்படுத்த முடியும்? அது எப்படி சட்டப்படி சரியாகும் என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சினிமா உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. 'நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நயன்தாரா தன் திருமண ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நிறுவனம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைப் பார்த்துத்தான் நயன் பொங்கி எழுந்து இந்த அறிக்கையை விட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் சிலர் சட்டப்படி எந்தவித புரிதலும் இல்லாமல் நயன்தாராவை ஆதரித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நயன் போட்ட போஸ்ட்டுக்கு லைக் போட்டதை வைத்தே பலரும் ஆதரவு கொடுத்துவிட்டதாக ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டு விவாதித்து வருகின்றனர்.
ஒருபடத்தின் காட்சி என்பது அது தயாரிப்பாளருக்கே சொந்தமானது. அப்படி இருக்கும்போது உரிய வகையில் அனுமதி பெறாமல் நயன்தாரா பயன்படுத்தி இருக்கக் கூடாது. சாதாரணமாக ஒரு சிறு காட்சியை யூடியூப் சேனல் வீடியோவில் பயன்படுத்தினாலே அது காப்பி ரைட்ஸ் சிக்கல் எழும். மிகப்பெரிய படத்தின் காட்சியை ஒடிடி தளத்தில் அனுமதி பெறாமல் எப்படிப் பயன்படுத்த முடியும்? அது அவர் நடித்த படமாக இருந்தாலும், அதற்காக உரிமை நயன்தாராவுக்கு இல்லை. தவறாகப் பயன்படுத்திவிட்டு, அதை மீறி விளக்கம் கேட்கும்போது அவர் தனுஷை தனிப்பட்ட வகையில் தாக்கி அறிக்கையும் கொடுத்துள்ளார். இது சட்டப்படி சரியானதா? காப்புரிமை சட்டம் என்ன சொல்கிறது?
அது பற்றி வழக்கறிஞர் கார்த்திகேயன், "காப்புரிமை என்பது பல விசயங்களில் உண்டு. ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஒரு குறிப்பிட்ட மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. அதை ஒருவர் வாங்கி பயன்படுத்தலாம். அவர் கொடுக்கும் பணம், அதைப் பயன்படுத்த மட்டும்தான். அதேபோன்ற ஒரு சாஃப்ட்வேரை தயாரித்து அதைத் திருட்டுத்தனமாக விற்றால் அது சட்டப்படிக் குற்றம்.
அதேபோல ஒரு மியூசிக் பிளேயர் வாங்கப் போகிறோம். அதைப் போட்டுக் கேட்க விரும்பினால், ஹெட்ஃபோன் கொடுத்துப் போட்டுக் கேட்கச் சொல்வார்கள். அது உங்களுக்கானது மட்டும்தான். வேறு யாரும் அதைக் கேட்கக் கூடாது. அதேபோல பெரிய 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஒலிக்கவிடப்படும் பாடல்கள் முறையாக அனுமதி பெற்ற பிறகே ஒலிக்க விட வேண்டும்.
இல்லை எனில் காப்புரிமை சட்டப்படி பிரச்சினைகள் வரலாம். ஒரு பொது நிகழ்ச்சியை ஒரு நிறுவனம் நடத்துகிறது எனில், அங்கே நடனமாடும் பாடல்களுக்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே நடன நிகழ்ச்சி சட்டப்படி நடத்த முடியும். இதை ஒரு நிறுவனம் மீறும் போது சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இவை அனைத்தும் கார்பரேட் ஆக்ட்டில் வரும். அடுத்து ஐடி ஆக்ட்.
உதாரணமாக உங்களுக்கு என்று ஒரு மின்னஞ்சல் கணக்கு உள்ளது. அதற்கு என்று ஒரு கடவுச்சொல் உள்ளது. அதுதான் நீங்கள் உரிமையாளர் என்பதற்குச் சான்று. அதைத் திருடி ஒருவர் பயன்படுத்தினால், அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை விதிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள சாஃப்ட்வேர் கோட் ஐ திருடி நீங்கள் பயன்படுத்தினால் அதுவும் திருட்டுதான். காப்புரிமை விதிமீறல்தான்.
சாஃப்ட்வேரை திருட்டுத்தனமாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தனித் துறையே மென்பொருள் துறையில் இயங்கி வருகிறது. ஒருவேளை திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால் புதிய பொருளை வாங்கி சொல்வதுடன், எத்தனை நாட்கள் பயன்படுத்தப்பட்டதோ அதற்காக நஷ்ட ஈட்டையும் வசூலிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது. ஒருவரை கைதும் செய்ய முடியும். ஐபிஆர் செல் என்று தனிச் சிறையே இயங்கி வருகிறது.
இந்தியக் காப்புரிமை சட்டத்தைத் தாண்டி சர்வதேச காப்புரிமை சட்டம் கூட உள்ளது. இது மிகக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் மில்லினியம் கார்ப்பரேட் ஆக்ட் என்று உள்ளது. இதைச் சுருக்கமாக DMCA என்பார்கள். ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஒருநாட்டில் தனது காப்புரிமையைப் பதிவு செய்தால், அது இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும்.
ஒருவரின் படைப்புக்கான காப்புரிமை என்று உள்ளது. இதற்குள் எழுத்தாளர், இசைக் கலைஞர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பலரும் அடங்குவர். ஒருவரின் காப்புரிமை அவரது வாழ்நாள் முழுவதும் செல்லும். அவர் இறந்த பிறகு அவரது வாரிசுகள் 60 ஆண்டுகள் அனுபவிக்கலாம். அதன் பின் பொதுச் சொத்தாக அது மாறிவிடும். அதே ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்தால், அது பதிவான தேதி முதல் 60 ஆண்டுகள் வரை செல்லும். முழு உரிமை அந்த நிறுவனத்திற்குத்தான். வேறு யாரும் அதை உரிமை கோர முடியாது.
இப்போது நயன்தாரா விவகாரத்தில் அவர் பணம் வாங்கிக் கொண்டு வணிகரீதியாகவே நடித்துக் கொடுத்துள்ளார். அதைத் தயாரித்த நிறுவனம் அதற்காக ஒரு சம்பளத்தை அவருக்கு வழங்கியுள்ளது. நயன்தாரா இலவசமாக நடித்துக் கொடுத்திருந்தால், அது வேறு. ஒரு பொருள் பொதுவான தளத்தில் இருப்பதால் யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திவிட முடியாது. அந்தக் காட்சிக்கு ஒரு மதிப்பு இருப்பதால்தானே எடுத்து நயன் பயன்படுத்துகிறார். அப்படி எனில் அதற்கு ஒரு வேல்யூ இருக்கிறதுதானே?
சட்ட விதிமீறல் இருப்பதால்தான் தனுஷ் சட்டப்படி நோட்டீஸ் அனுப்புகிறார். அதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் அவர் மீது களங்கம் கற்பித்தால், அதற்குத் தனியாக மான நஷ்ட ஈடு கேட்டு ஒரு வழக்கை தனுஷ் தொடர முடியும். அதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. நயன் தனது வணிக நோக்கத்திற்காகத்தான் அந்தக் காட்சியைப் பயன்படுத்தி இருக்கிறார். அவர் அப்படிச் செய்யாமல் ஒரு ஆய்வுக்காகவோ அல்லது கல்வி சம்பந்தமாகவோ பயன்படுத்தி இருந்தால் அதற்கு உரிமை கோர முடியாது. அதற்காக உரிமை நயன்தாராவுக்குக் கிடைக்கும். இந்த விசயத்தில் அப்படி இல்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications