மற்றவர் உணர்வை புண்படுத்தும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை! ஈகோ பார்க்காமல் நயன்தாரா வருத்தம்!
சென்னை: மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு துளியும் இல்லை என நடிகை நயன்தாரா விளக்கமும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலத்தில் ஈகோ பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா எவ்வித ஈகோவும் இல்லாமல் அன்னபூரணி திரைப்பட விவகாரம் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.
அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.
கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.''












Click it and Unblock the Notifications