மாணவி இறந்தது எப்படி? கள்ளக்குறிச்சி விரையும் டெல்லி குழு.. பள்ளிக்கு சென்று விசாரிக்க திட்டம்
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக நேரில் விசாரிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழு அமைத்து உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மர்ம மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

கலவரம்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர்.

பலர் கைது
போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நயினாய் பாளையம் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மறு பிரேத பரிசோதனை
இது தொடர்பாக 108 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நேற்று மறு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழு நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. அந்த ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு கள்ளக்குறிச்சிக்கு வரும் 26 ஆம் தேதி வருகை தந்து நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
Recommended Video

பள்ளியில் விசாரிக்க திட்டம்
டெல்லியிலிருந்து 26 ஆம் தேதி நள்ளிரவு கள்ளக்குறிச்சி வரும் அந்த குழு 27 ஆம் தேதி வரை தங்கி இருந்து மாணவி உயிரிழந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளது. அத்துடன் வழக்கு விபரங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விபரங்களை கேட்டுப்பெறும் அந்த குழு, உயிரிழந்த மாணவியின் பெற்றோரையும் சந்தித்து பேச இருக்கிறது. இந்த குழுவுடன் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications